வெள்ளி, 30 ஏப்ரல், 2010

இந்த ஊருக்கு (ஜப்பானுக்கு) படிக்க வந்ததுக்கப்புறம், பொழுதுபோக்கு அப்படீங்கிற வார்த்தைக்கு அர்த்தம் மாறிப்போச்சா இல்ல சுத்தமா இல்லாமையே போய்ட்டுதாங்குற ஒரு சந்தேகம், மனசுல அப்பப்போ வந்துபோகும். ஏன்னா, படிக்கும்/ஆய்வு செய்யும் நேரம் போக, பொழுதை வேறுவிதமாய் கழிக்க கிடைக்கும் சில சனி, ஞாயிறுகளில் பௌலிங், கராஒக்கே இப்படி எங்கேயாவது போவதுண்டு!
அப்படிப்போகும் விளையாட்டு மையங்களிலெல்லாம் (கேம் சென்டர்கள்), சில பல தளங்களைத் (ஃப்ளோர்கள்) தாண்டியே பௌலிங் பகுதி இருக்கும். அந்த ஆரம்ப தளங்களைத் தாண்டும்போது, லொட்டு….லொட்டு…..லொட்டு என்று ஒரே இரைச்சலாவே இருக்கும். இவ்வளவு சத்தம் வர்ற மாதிரி அப்படி என்னதான் பண்றாய்ங்கன்னு ஒரு நாள் போய்ப் பார்த்தா, கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போன மாதிரி இருந்தது…..?!
அட ஆமாங்க, என்னத்துக்கு பண்றாய்ங்கன்னே தெரியாதமாதிரி (ஒரு வேளை நமக்குத்தான் தெரியலையோ), கியர் மாதிரி இருக்குற எதையோ புடிச்சி இப்படியும் அப்படியும் அடிச்சிக்கிட்டு, வெளையாட்டுங்கிற பேர்ல ஒரு ஆர்பாட்டத்தையே பண்ணிக்கிட்டு இருந்தாய்ங்க!
இவிங்களுக்கெல்லாம் வேற வேலையோ இருக்காதோ? இதே பொழப்பா வந்து உக்காந்துக்கிட்டு, அந்த வழியா போற வர்ற நம்மள மாதிரி ஆளுங்களுக்கு தலைவலிய உண்டுபண்றாய்ங்களேன்னு எனக்கு நானே புலம்பிக்குவேன். பின்ன கூட வர்ற ஜப்பான்காரங்கிட்டயா சொல்ல முடியும் இவிய்ங் குடுக்குற அளப்பரைய?!
இதையெல்லாம் நான் ஏன் உங்ககிட்டச் சொல்றேன்னா, இதுவரைக்கும் நான் என்னவோ இந்த மாதிரி விளையாட்டு மையங்கள்ல வந்து இப்படி இம்சைய குடுக்குற கும்பல், வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுந்தான் வெளையாடுறாய்ங்க போலிருக்குன்னு ரொம்ப அப்பாவியா (?) நெனச்சிக்கிட்டு இருந்தேன். என்ன…. நீங்களுமா?!
ஆனா, சமீபத்துல வெளிவந்த ஒரு ஆய்வுச் செய்திய படிச்சதுக்கப்புறந்தான் தெரிஞ்சது, மூளைப்பயிற்ச்சி விளையாட்டுங்கிற பேர்ல, சில/பல விளையாட்டு மென்பொருள் நிறுவனங்கள் கொடுத்த கவர்ச்சிகரமான விளம்பரங்கள நம்ம்ம்பி…..?!, இந்தக் கூட்டத்துல பாதிப்பேருக்கு மேல, பல விளையாட்டு மையங்களுக்குப் போய் மூளைக்கு பயிற்ச்சிக் குடுக்குறதா நெனச்சிக்கிட்டு வெளையாடுறாங்கன்னு…..
என்னங்க, நான் சொல்றது எதாவது புரியுதுங்களா? இல்லைன்னாலும் பரவாயில்லை, வாங்க அந்த ஆய்வுச் செய்திய பத்தி இன்னும் விரிவா படிப்போம்……(நீங்க வேணாம் விடுப்பான்னு கெஞ்சி கேட்டாலும் உங்கள விடுற மாதிரி இல்ல ;-) )
கணினி விளையாட்டு விளையாடு! புத்தியை (IQ) கூட்டு?!
மேலே நான் குறிப்பிட்ட, மூளைக்கு பயிற்ச்சி தருவதாய் சொல்லும், கணினி 
விளையாட்டு நிறுவனங்களின் விளம்பரங்கள் எப்படி இருக்கும்னா, “ஒரு கணினி விளையாட்டு விளையாடு, உன்னுடைய புத்தியை/IQ வை அதிகமாக்கு” இப்படித்தான் இருக்குமாம். இப்படியொரு விளம்பரத்தைப் பார்த்தவுடனே கொஞ்சங்கூட யோசிக்காம உடனே குறிப்பிட்ட அந்த மென்பொருளை வாங்கி விளையாட ஆரம்பிச்சிடுறாங்க குழந்தைங்க, உண்மை தெரியாமையே?!
இது மாதிரியான மூளைப்பயிற்ச்சி விளையாட்டு மென்பொருள்களின் கூற்று எவ்வளவு தூரம் உண்மை அல்லது மோசடியாயிருக்கும்னு தெரிஞ்சிக்க/கண்டுபிடிக்க, பி.பி.சியின் அறிவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்தயாரிப்பாளர்கள், இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் நகரில் இருக்கும், மூளை ஆய்வு மையத்தை (MRC Cognition and Brain Sciences) தொடர்புகொண்டு, இத்தகைய விளையாட்டு மென்பொருள்களின் தகுதியை சோதனை செய்ய ஒரு ஆய்வு நடத்துமாறு கேட்டுக்கிட்டாங்களாம்!
ஏட்ரியன் ஓவென் என்னும் ஆய்வாளர் நடத்திய, சுமார் 11,430 ஆரோக்கியமானவர்கள் பங்குபெற்ற,  நியாபக சக்தி, கவனம், கணக்குப் பாடத்தில் பயிற்ச்சி மற்றும் பல்வேறு மூளைச் செயல்பாடுகளைச் செம்மைப்படுத்தும்/அதிகரிக்கும் விளையாட்டு என்று விளம்பரப்படுத்தப்பட்ட விளையாட்டு மென்பொருள்கள் குறித்த ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு……
  1. விளையாடப்படும் குறிப்பிட்ட ஒரு விளையாட்டில் மேம்படுவதைத் தவிர, இவ்விளையாட்டுகள் குழந்தைகளின் (விளையாடுபவரின்) மூளையின் செயல்திறனை, எந்தவிதத்திலும் பாதிக்கவோ/அதிகரிக்கவோ இல்லை
  2. விளையாட்டு மென்பொருள்களைப் பயன்படுத்தியவர்களும், பயன்படுத்தாது சாதாரணமான மூளைப்பயிற்ச்சிகளில் ஈடுபட்டவர்களும், ஆய்வின் முடிவில் ஒரே மதிப்பெண்ணைத்தான் பெற்றிருந்தார்கள்!
விளையாட்டு மென்பொருள் நிறுவனங்களைத் தொடங்கு! ஊரை நல்லா ஏமாத்து?!
சமீபத்தில், Nature என்னும் உலகப் பிரபல அறிவியல் வார இதழில் வெளியான இந்த ஆய்வுச் செய்தியை படித்த, ஸ்வீடன் நாட்டு கரோலின்ஸ்கா கல்விமையத்தின் நரம்பியல் விஞ்ஞானி டார்கெல் க்லீன்பெர்க் சொல்றாரு, “ஒரே ஒரு ஆய்வின், பாதகமான ஒரு முடிவைச் சொல்லும் ஒரு சோதனையை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த விளையாட்டு மென்பொருளின் தரத்தையும், தகுதியையும் குறைத்துச் சொல்வதும், பலனற்றது எனச் சொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று”?!
மக்களே….இங்கேதான் நீங்க கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கு. அது என்னன்னா, இந்த டார்கெல் அப்படீங்கிற விஞ்ஞானி (?), மூளைப்பயிற்ச்சியை ஏற்படுத்துவதாக சொல்லிக்கொள்ளும் விளையாட்டு மென்பொருள்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரர் அப்படீங்கிறதுதான் அது. இப்போ நீங்களே முடிவு பண்ணிக்குங்க, இந்த ஆளு சொல்றத ஏத்துக்கனுமா வேணாமான்னு?!
இவிய்ங்களுக்கு இதே பொழப்புங்க! அதாவது ஒரு நல்ல கல்வி நிறுவனத்துல பணிக்காலம் முடிஞ்சி ஓய்வு பெற்றுக்கொண்டு பிறகு, தன் துறைக்குத் தொடர்பான ஒரு நிறுவனத்தைத் தொடங்கிட வேண்டியது. அதுக்கப்புறம், தன்னோட ஆதிகால விஞ்ஞான அருமை பெருமைகளை எல்லாம் மூலதனமா வச்சிக்கிட்டு, இப்படி எதையாவது ஒரு மென்பொருளை உருவாக்கி ஊரை ஏமாத்தி சம்பாதிக்க வேண்டியது?!
தவறான சில பேரு இது மாதிரியான மென்பொருள்கள் உருவாக்கி மக்களை எப்படி ஏமாத்துறாங்கன்னு, கீழே இருக்குற காணொளியில பாருங்க (அதுக்காக இது ஒரு ஏமாத்து வேலைன்னு நான் சொல்லலீங்கோவ்!)http://www.youtube.com/watch?v=gc0EOrgLmm8&feature=player_embedded#at=30
என்னங்க, காணொளியைப் பார்த்தாச்சா? ஏங்க….இப்ப நீங்களே சொல்லுங்க, இது மாதிரி ஒரு அழகான நடிகையை வச்சி ஒரு மென்பொருளை விளம்பரப்படுத்தினா வாங்காம இருப்பாங்களா மக்கள்??
அதுக்காக, இப்படி ஒரு ஆய்வின் முடிவை கேள்விக்குள்ளாக்கும் எல்லா விஞ்ஞானிகளுமே இப்படித்தான்னும் சொல்லிட முடியாதுங்கிறதையும் நீங்க புரிஞ்சிக்கனும்?! ஆக, எந்த ஒரு ஆய்வின் முடிவையும் சந்தேகித்துக் கேள்வி கேட்கும் உரிமை, விஞ்ஞானிகளுக்கும், படித்தவர்களுக்கும் மட்டுமல்லாது, பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு!
அதனால, இந்த ஆய்வு குறித்த உங்க கருத்துகளையும் பதிவு செஞ்சுட்டுப் போங்களேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக