ஞாயிறு, 26 அக்டோபர், 2014

பொன்மொழிகள்
பகுத்தறிதல்

ஆக்கம்: திரு. கு.சீனுவாசன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாலை அகரம், கோலியனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.

http://www.sikaram.lk/wp-content/uploads/2012/08/fox.jpg
நம்திறமை நாமறிந்தால்
நினைத்தவாறு வெற்றி கிட்டும்!
திறமையை வெளிப்படுத்த
குறிக்கோள் வேண்டுமன்றோ?
நாம் குறிக்கோளை அடைவதற்கு
சரியான அணுகு முறையை
தேர்ந்து எடுக்க வேண்டும்!

http://2.bp.blogspot.com/-hnzMk_mVH7s/UffWdYNYJ5I/AAAAAAAAF_w/62QNTEeMyi8/s1600/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...!.jpg
அண்டப்புளுகு புளுகுவோரை
அப்படியே நம்பலாமா?
ஏன்? எப்படி?எதற்கு?என்று
கேள்விகள் கேட்டிட வேண்டாமா?
தென்னையிலே தேள்கொட்ட
பனையிலா நெறி கட்டும்?
பகுத்தறிந்து பார்க்க வேண்டும்!

இயற்கையின் மேல் குறையில்லை!
இயைந்து வாழ்ந்தால் குற்றமில்லை!
வற்றும் வளங்கள் தீர்ந்தால்
வருங் காலம் என்னாவது?
நாம் இக்கட்டான சூழ்நிலையை
எதிர் கொள்ளும் நடவடிக்கை
இப்போதே எடுக்க வேண்டும்!

உண்ணும் உணவே மருந்தாகும்!
உணர்ந்தாலே உடல் நலமாகும்!
உணவு பழக்கத்திலே
கட்டுப்பாடு வேண்டாமா?
நாம் சைவம் என்றாலும்
அசைவம் என்றாலும்
அளவாக உண்ண வேண்டும்!

http://www.thinakaran.lk/2012/08/11/l1208112.jpgமுட்டாள் சொல்வான் முடியாது!
முயற்சிக்காமல் விடிவேது?
தொடர்ந்து முயற்சிப்பதை
தோல்வி என்றா சொல்லுவது?
நாம் மந்திரத்தில் மாங்காய்கள்
ஒருபோதும் விழாதென்று
உணர்ந்து உழைக்க வேண்டும்! 

தண்டனையின் பயம் செயலைச் சிறப்பாக்கும்

ஒருவரை நன்கு வேலை செய்யச் செய்வதற்கு - சன்மானம் கொடுத்து ஊக்குவிப்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான். ஆனால் சமீபத்திய ஆய்வு - நார்டிங்க்காம் சர்வகலாசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு - “தவறான செய்கைக்குக் கொடுக்கும் தண்டனை சரியாகச் செய்யும் செய்கைக்கு பணமாகக் கொடுக்கும்  சன்மானம் போல் செயல்படுகிறது” என்ற முடிவுக்கு வந்துள்ளது.
தலைக்கு மேல் கத்தி தொங்கி இருக்கும் நிலையில் ஒருவன் வேலை செய்தால், அவனது கவனம் சிதறி, வேலையை ஒழுங்காகச் செய்ய மாட்டான் என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், இந்த ஆய்வு அதற்கு நேர்மாறாக, தண்டனையின் பயச் சூழ்நிலையில், ஒருவனது பார்க்கும் திறன் - கேட்கும் திறன் ஆதிகரிக்கிறது என்று தடாலடியாகச் சொல்கிறது.
‘அவர்களின் ஆய்வு தான் என்ன?’ என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம்: ‘ஒருவன் ஜன்னல் உள்ள அறையில் உட்கார்த்தி வைக்கப்படுகிறான். வெளியே மழை பெய்கிறது. மழை நீர் ஜன்னல் கண்ணாடியில் தெளித்து விழுவதால், வெளியில் உள்ள உருவம் மங்கலாகத் தெரிகிறது. அந்த உருவம் மனிதனா அல்லது வேறு ஏதாவதா? என்று அறையிலிருந்து பார்த்துக் கணித்துச் சொல்ல வேண்டும்.
தவறாக கணிக்கும் ஒவ்வொரு முறையும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மோசமான தவறுகளுக்குத் தண்டனையின் அளவும்  அதிகமாகும். இந்தச் செயல்களின் போது அவர்களின் மூளை வேலை செய்யும் விதம் கண்காணிக்கப்படும்.
சிறப்பாக வேலை செய்பவர்களுக்கு பணத்தைச் சன்மானமாகக் கொடுத்தால் எப்படி அவர்கள் செயல்படுவார்களோ அதே மாதிரி தண்டனையும் செயல்படுகிறது என்பதைக்  கண்டுபிடித்தார்கள்.
சரியான முடிவெடுப்பதில் தண்டனை மூளையைச் சரியானபடி செயல்பட வைக்கிறது என்கிறார்கள்.
‘ஆட்டிசம்’, ‘ஏ.டி.எச்.டி.’ - (Autism and ADHD - Attention Deficit Hyperactivity Disorder) - ஆகியவைகளால் மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனைத் தத்துவம் பயன்படும் என்று உறுதி அளிக்கிறார் ஆய்வாளர் டாக்டர் மாரியோஸ் பிலியாஸ்டிட்ஸ் - Marios Philiastides.
ஏர்வாடியில் பைத்தியங்களை ‘தண்டனை’ கொடுத்துக் குணப்படுத்துவதை இது சரி என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. என்றாலும், ‘தண்டனை வலி’ என்பது மனிதனின் திறனை ஊக்குவிக்கும் என்பது தற்போதைய நாகரீக உலகத்தின் இதயத்தையே வலிக்கச் செய்யும்.
மேல் நாட்டு ஆய்வு அறிக்கைகள் பல நம் மூளையைக் குழப்பி, நம்மைச் செயலிழக்கச் செய்து விடும் அபாயம் உள்ளது என்று நான் சொன்னால், அதை ஏற்பவர்கள் ஒரு சிலராவது இருப்பார்களா என்பது சந்தேகமே.
‘இந்த ஆய்வு உனக்குப் புரியாவிடில், உனக்கு மூளையில் கோளாறு’ என்று என்னைச் சொல்லி விடுவார்களோ என்ற பயத்துடனே இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சுரேஷ் டெண்டுல்கள் வறுமைக் கோடு

வறுமை என்பது ஏழ்மையைக் குறிக்கும். வறுமையை ஒழிக்க மத்திய அரசாங்கத்திற்கு கொள்கையை வகுத்து வழிகாட்டும் பொறுப்பு இந்திய திட்டக் கமிஷனுக்கு உண்டு. பல ஏழைகளுக்கு உதவும் திட்டங்களை அரசு செயல்படுத்த ஏழ்மை நிலை தெரிய வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு இலவசமாகவும் அல்லது மான்யத்தின் அடிப்படையில் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வினியோகத்தும் ஏழை-எளிய மக்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் கடமையாகிறது.  கட்டாயக் கல்வி, உணவு உத்திரவாதம், இலவச மருத்துவ வசதி, கிராமப்புற கட்டாய வேலை வாய்ப்புத் திட்டம் ஆகியவைகளின் பயனாளிகளைக் கண்டறிய இந்த வறுமைக் கோடு பயன்படும்.
2009-ஆம் ஆண்டு சுரேஷ் டெண்டுல்கர் தலைமையில் வறுமைக் கோட்டை வரையறை செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அது வறுமைக் கோட்டை இப்படி விளக்கியது: நகரத்தில் வசிப்பவர்கள் நாள் ஒன்றுக்கு ரூபாய் 28.65 கீழே சம்பாதிப்பவர்களும், கிராமத்தில் வசிப்பவர்கள் நாள் ஒன்றுக்கு ரூபாய் 22.42 சம்பாதிப்பவர்களும் - வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள்(Below Powerty Line - BPL). இதைத் தான் டெண்டுல்கர் வறுமைக் கோடு என்று குறிபிடுகிறோம்.
இந்த வறுமைக் கோடு தவறான கோடு - இதன் மூலம் பல ஏழைகள் பலனடையாமல் போக வழி உண்டு. ஆகையால் இந்தக் கோட்டை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எதிர்ப்பு கிளம்பியதால், இந்தக் கோடு அனேகமாக அழிந்த கோடுதான். வேறு கோடு போடுவதற்கு சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு புதிய கமிட்டியை உருவாக்கி, வறுமைக் கோட்டிற்கு புதிய முறை அவசியமா என்பதை ஆராய உத்திரவிடப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் அறிக்கை வெளியிடப்பட இருக்கிறது. ஆனால், கிராமப்புற மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் அதற்குள் - ‘இனி வெளியிடப்படும் வறுமைக் கோடு டெண்டுல்கர் கோடாக இருக்காது’ என்றே சொல்லி விட்டார். ஆகையால் வறுமைக் கோட்டின் ஒரு நாள் வருமானம் டெண்டுல்கர் கணித்ததை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இருப்பினும், நமது நோக்கம் டெண்டுல்கள் வறுமைக் கோடு தவறாகக் கணிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை நிரூபிப்பது தான்.
முன்பு - அதாவது டெண்டுல்கருக்கு முன்பு - வறுமைக் கோடு என்பது கிராமப்புற நபர் ஒருவரின் வருமானம் ரூபாய் 12-க்கும் கீழேயும், நகரத்தில் நபர் ஒருவரின் வருமான ரூபாய் 17-க்கும் கீழேயும் இருந்தால் - அவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள். இந்த வறுமைக் கோட்டை ஒருவரின் உணவு உட்கொள்ளும் கலோரியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டதாகும். ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர, அவர்களின் உணவு உட்கொள்ளும் தரத்துடன், கல்வி, சுகாதாரம், விளக்கு, உடை மற்றும் காலணிகள் ஆகியவைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று டெண்டுல்கர் கமிட்டி தீர்மானித்து அதன் அடிப்படையில் வறுமைக் கோடு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த முறைப்படி கணிக்கப்பட்ட்தில், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் மக்கள் மொத்த ஜனத்தொகையில் 27.5% - லிருந்து 37.2% என்ற அளவு அதிகரித்துள்ளார்கள். இது வறுமைக் கோட்டின் ரூபாயின் மதிப்பைக் குறைத்த பிறகும் ஏற்பட்ட நிலை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது வறுமைக் கோட்டை ரூபாய் 33 ஆக கிராம நபருக்கும், ரூபாய் 45 ஆக நகர நபருக்கும் வரையறை செய்வதாக உதாரணமாக வைத்துக் கொள்வோம். இதன் விளைவு என்னவாகும்?
70% கிராமத்தினரும், 50% நகரத்தினரும் வறுமைக் கோட்டிற்குள் வந்துவிடுவர். ஆனால், வறுமை ஒழிப்பிற்கு ஒதுக்கீட்டுத் தொகை மட்டும் அதிகரிக்கப் போவதில்லை. இதனால், கீழ் மட்ட ஏழையிலும் ஏழையாக இருக்கும் பரம ஏழை - அநாதை நிலையில் இருக்கும் ஏழைகள் - பாதிக்கப்படுவார்கள்.
இதை  உதித் மிஸ்ராவின் வலைப் பூ துள்ளியமக விளக்கி உள்ளது. அதிலிருந்து முக்கியமான கருத்தைச் சுருக்கி எழுதுகிறேன் என் பாணியில்.
வறுமைக் கோடு என்பது ஏழை யார் என்பதை நிர்ணயம் செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அடையாளம். வறுமைக் கோட்டின் மூலம், ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை அளவிடக் கூடாது. மிகவும் அத்தியாவசியமானவைகளைப் பெறும் தகுதி உள்ளவர்கள் யார் என்பதை நிர்ணயிப்பதற்குத் தான் அது உதவ வேண்டும். இது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து ஒருவனின் வாழ்வை உயர்த்த உதவும் கோடு அல்ல. ஏழைக்கு அத்தியாவசியமானவைகளை அளித்து, அவனை வறுமைக் கோட்டிற்கு மேலே வளரும் படிச் செய்வது தான் அதன் நோக்கம். அதாவது ஒருவரும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்காத ஒரு நிலையை ஒரு நாடு அதி வேகமாக அடைய திட்டங்கள் தீட்ட வேண்டியது ஒரு சிறந்த அரசாங்கத்தின் கடமையாகும்.
இதை ஒரு உதாரணத்தால் விளக்குவோம். 5 பேர்கள் - A, B, C, D & E இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
நமது பொருளாதார மொத்த வரவு ரூபாய் 100 என்று வைத்துக் கொள்வோம்.
A - யின் வருமானம் ரூபாய் 35, B-யின் வருமானம் ரூபாய் 30,  C-யின் வருமானம் ரூபாய் 20, D-யின் வருமானம் ரூபாய் 10, E-யின் வருமானம் ரூபாய் 5 என்று மொத்த பொருளாதராம் ரூபாய் 100-ஆக இருக்கும்.
இந்த நிலையில், D & E - ஆகியவர்கள் தான் இந்தப் பொருளாதரத்தில் ஏழைகள் என்று சொல்லலாம். ஆகையால் வறுமைக்கோட்டை ரூபாய் 10-ல் கிழிக்கலாம். இதன் மூலம், நமது கவனம் எல்லாம் இந்த D & E - ஆகிய இரண்டு மிகவும் கீழான நிலையில் உள்ள மக்களை முன்னேற்றம் செய்வதில் முழுக் கவனம் செலுத்த முடியும்.
ஆனால், C-யையும் வறுமைக் கோட்டிற்குள் கொண்டு வர நினைத்தால் என்ன ஆகும்? இந்த நிலையிலும், C-என்பவரின் வருமானம் D-விட 2 பங்கும், E-யை விட 4 பங்கும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். C-யை வருமைக் கோட்டிற்குள் கொண்டு வந்ததால், மிகவும் பின் தங்கிய D & E -  ஆகியவர்களுக்குக் கிடைக்கும் மான்யம் அவர்களை விட நல்ல நிலையில் உள்ள C-யுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு, D & E -க்கு உதவிகளின் அளவு குறைந்து விடும். பகிர்ந்து கொடுக்கப்படும் பண்டங்கள் அதிக அளவில் இருந்தால், வறுமைக் கோட்டை ரூபாய் 100 என்று கூட வைத்துக் கொள்ளலாம்.
இன்னொன்றையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். C-யையும் - அவரது வருமானம் D & E-யை விட அதிகமாக இருப்பதால் - வறுமையை ஒழிக்கும் கோட்டில் சேர்க்கும் போது, அவரது நுகரும் நிலையையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் போது, உண்மையான D & E -ஆகியவர்களின் தேவைகள் புறக்கணைக்கப்பட வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக,  C-க்கு மான்ய உணவு வகைகள் தேவைப்படா. அதற்குப் பதில், பயிற்சிக் கல்விக்கு உதவி தேவையாக இருக்கும். அனால், E-யின் தேவை உணவாகத் தான் இருக்கும். அரசாங்கத்தின் இருக்கும் குறைந்த இருப்பை, அதிகமான ஏழைகள் - அடிமட்ட ஏழைகள் பயன்படும்படிச் செய்ய நினைத்தால் வறுமைக் கோட்டை உயர்த்தக் கூடாது. அதை விடுத்து, வறுமைக் கோட்டை உயர்த்தினால், அது பரம ஏழைகளுக்கு அநீதி இழப்பதாகத் தான் முடியும். இது பொருளாதார உண்மை. ஓட்டு வங்கிக்கு இது ஒத்து வராது. ஆகையால், அரசியல் வாதிகள் இதை ஆதரிக்க மாட்டார்கள்.
“வயிற்றிற்குச் சோறிடல் வேண்டும்
இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம்
பயிற்றுப் பலகல்வி தந்து இந்தப்
பாரை உயர்த்திடல் வேண்டும்”
-      என்ற மஹாகவி பாரதியின் கனவு நனவாகி, இந்த உப்புக்குச் சப்பில்லாத - வறுமைக்கோட்டையே ஒழித்து,
‘ஏழைஎன்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை இந்த நாட்டிலே’ - என்ற பாரதியின் வாக்கு பலிக்க நல்ல வழி பிறக்க வேண்டும். 

“பாலம்” கல்யாணசுந்தரம்

பெயர்: - பி. கல்யாண சுந்தரம் - “பாலம்” சமூக நலப் பணிக்கு அவர் உருவாக்கிய நிறுவனம்.
பிறப்பு - ஆகஸ்ட், 1953 - மேலக்கரிவலக்குளம், திருநெல்வேலி.
குடும்பம்: பிரம்மசாரி. சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். தாய் தான் தமது தயாள குணத்திற்கு ஆசான் என்று தாயாரை ஆராதிப்பவர். தமது உடலையும் கண்களையும் தானமாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு அர்ப்பணித்துள்ளார்.
படிப்பு: கோல்ட் மெடலிஸ்ட் லைப்ரரி சயன்ஸ் பட்டம். லைப்ரரியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை மூலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழக முனைவர் பட்டம்.
வேலை: 35 வருடங்களாக குமரகுருபர கலைக் கல்லூரி, ஸ்ரீவைகுண்டத்தில் லைப்ரரியன்.
வேலையில் திறமை: லைப்ரரியில் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் எளிய உத்தியை கண்டு பிடித்துள்ளார்.
இமயமலை அளவு அவரது சிறப்பு அம்சங்கள்:
·         தமது சம்பளம் முழுவதையும் - ஆமாம் முழுவதையும் தான் - சமூக சேவைக்காக 35 வருடங்களாக தொடர்ந்து செய்து வந்தவர். தமது சொந்தச் செலவுக்குக் கூட தமது சம்பளத்தில் எந்த பகுதியையும் ஒதுக்காமல், முழுவதையும் சமூக சேவைக்காக அளித்தவர். தமது சொந்த செலவுக்கு, ஆபீஸ் வேலை முடிந்த பிறகு, ஹோட்டலில் சர்வர் பணி புரிந்த உத்தமர்.
·         பணி ஓய்வின் போது கிடைத்த ரூபாய் 10 லட்சத்தையும் சமூகப் பணிக்கு அளித்தவர்.
·         தமது பூர்வீக வீட்டையும் தானமாக கொடுத்த தர்மவான்.
·         “பாலம்” என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். புயல் நிவாரண நிதியை மக்களிடம் பெற்று, அரசாங்கத்திடம் அளித்து, சேவை செய்கிறது அவரது அந்த நிறுவனம். எல்லை தாண்டியும் அது பணி ஆற்றுகிறது - ஆந்திரா, ஒரிசா, குஜராத் என்று “பாலம்” பாரத தேசத்தின் பல இடங்களிலும்  உதவுகிறது.
·         இந்தியா - சைனா யுத்தத்திற்கு காமராஜரிடம் தமது தங்கச் சங்கலியை தேசிய நிதிக்கு அளித்தவர்.
·         வேலையில் சேருவதற்கு முன்பு, விகடன் காரியாலத்திற்குச் சென்று, விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியனைப் பார்த்து, தம்மைப் பற்றி எழுத வேண்டினார். அவரைப் பார்த்து பால சுப்பிரமணியன், “நீங்கள் சம்பாதித்து, அதை சேவைக்கு அர்ப்பணித்து விட்டு வாருங்கள்’ என்று விரட்டி அடிக்கப்பட்டார். ஆனால், இதையே ஒரு உபதேசமாகக் கொண்டு. தொண்டு செய்யும் விதையை தம் உள்ளத்தில் ஊன்றி, வளர்த்துக் கொண்டார்.
·         தாம் கதர் உடுத்த ஆரம்பித்த காரணத்தை அவர் கூறக் கேட்போம்: “எளிமையையும், காந்தீயம் பற்றியும் உரையாற்ற கல்லூரிகளுக்குச் சென்றுள்ளேன். மில் உடைகளுடன் எளிமையையும், காந்தியத்தையும் பற்றிப் பேசுவது என் மனத்தை உறுத்தியது. உடனேயே காதிக்கு மாறி விட்டேன்.”
·         “பாலம்” கல்யாணசுந்தரத்தின் தியாகத்தை அறிந்த சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இவரை தமது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார்.
“பாலம்” கல்யாணசுந்தரத்திற்குக் கிடைத்த பாராட்டுக்களின் பட்டியல்:
·         வேலையில் கிடைத்த சம்பாத்தியம் அனைத்தையும் சமூகப் பணிகளுக்கு அன்பளிப்பாக அளித்த உலகத்திலேயே முதல் நபர் என்ற தகுதிக்காக அமெரிக்க அரசாங்கம் “லட்சத்தில் ஒரு லட்சிய மனிதர்” - “Man of the Millenium” -  என்ற பட்டத்தை அளித்துக் கெளரவித்தது. அவர்கள் அளித்த ரூபாய் 30 கோடிகளையும் அப்படியே சமூகப் பணிக்கு அளித்து விட்டார்.
·         நமது இந்திய அரசாங்கம் - “இந்தியாவின் சிறந்த லைப்ரரியன்” என்ற பட்டத்தை அளித்தது.
·         “உலகத்து சிறந்த 10 லைப்ரரியன்களில் ஒருவர்” என்ற புகழ் பெற்றார்.
·         உலக பயோக்கிராஃபிகல் மையம், கேம்பிரிஜ் - உலகத்தின் சிறந்த மனிதாபிமானி - என்று கெளரவித்தது.
·         ஐக்கிய நாட்டுச் சபை “20-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்” என்று தேர்வு செய்து, பாராட்டியது.
·         அமெரிக்க ஸ்தாபனம் ஒன்றும் - “லட்சத்தில் ஒருவர்” - என்ற பட்டம் கொடுத்துள்ளது.
அவர் சொல்லும் அறிவுரை:
“ஏதோ ஒரு விதத்தில், நாம் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு உதவினால் தான், சமூகத்தை நீடித்து நீண்ட நாள் முன்னேற்றமடையச் செய்ய முடியும். யாரோ ஒருவர் ஒரு சிறிய அளவு சமூக சேவை செய்தாலும், சமூக மாற்றம் ஏற்படும் என்பது தான் எனது அசைக்க முடியாத நம்பிக்கை.”
அவரது நீண்ட காலத்திட்டங்கள்:
·         அனைவருக்கும் பயன்படும் தேசிய மின் லைப்ரரி அமைத்தல்.
·         அந்நிய நிதி பெற்று அகில உலக குழந்தைகளுக்கான பல்கலைக் கழகம் அமைத்தல்.
அவரது அழ்ந்து சிந்திக்க வைக்கும் பொன் மொழி: சரியான நபர் அமைந்தால் தான், எந்தக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
மனிதரில் மாணிக்கமாகத் திகழும் “பாலம்” கல்யாணசுந்திரத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் அதற்கு அவரது தியாகம் ஈடாகாது.
ஆசிரியர்களும் மாணவர்களுக்கும் இவரது தியாகம் ஒரு சிறந்த பாடமாகும்.
அனுப்பு: ஜி.வைத்தியநாதன், ஒய்வுபெற்ற துணைப் பொது மேலாளர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.
ஆதாரம் இந்து பத்திரிகைச் செய்தி: மின் வலைத் தொடர்பு.

சனி, 25 அக்டோபர், 2014

அறிவியல் செய்திகள்

  1. மனிதனைப் போல பேசும் அதிசய திமிங்கிலம்அமெரிக்காவைச் சேர்ந்த அதிசய  வெள்ளைத் திமிங்கிலம் ஒன்று மனிதனைப் போல பேச்சொலி  எழுப்புவது ஆய்வாளர்களை  ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த அதிசய திமிங்கிலத்தின் திறமையை  கண்டுபிடித்த கதையே சுவாரசியமானது.
 கலிபோர்னியாவில் இருக்கும் தேசிய கடல்வாழ் பாலூட்டிகள் ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஆழ்கடல் மூழ்கி  ஒருவர், ஒரு நாள் நீருக்குள் மூழ்கியிருந்தார். அவர் திடீரென  நீரிலிருந்து மேலே வந்தார். வந்த பிறகு உடனடியாக நீரிலிருந்து மேலே வரச்சொல்லி என்னை கூப்பிட்டது யார் என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார்.
ஆனால், கரையில் நின்றிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.ஏனென்றால், அவரை நீரிலிருந்து மேலே வரும்படி யாரும் அழைக்கவில்லை. ஆனால் நீரில் மூழ்கியிருந்தவரோ தனக்கு குரல் கேட்டதாக அடித்துச் சொன்னார். அவர்கள் இருந்த இடத்தில் அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. சில திமிங்கிலங்களைத் தவிர.
ஆய்வாளர்களுக்கு லேசாக சந்தேகம் ஏற்பட்டது. இந்த திமிங்கிலங்கள் ஏதாவது குரல் எழுப்பியிருக்குமோ என்று சந்தேகப்பட்டவர்கள், அந்த திமிங்கிலங்களை கண்காணிக்கத் தொடங்கினார்கள். சில தினங்களிலேயே அவர்களின் சந்தேகம் உறுதியானது.
பேசமுயலும் பெலுகா திமிங்கிலம்
என்.ஓ.சி. என்று பெயரிடப்பட்டிருந்த ஒன்பது வயது பெலூகா இன வெள்ளைத்திமிங்கிலம் தான் மனிதர்களை மாதிரி ஒலி எழுப்புகிறது என்று அவர்கள் கண்டுபிடித்தபோது ஆச்சரியம் பலமடங்கானது.காரணம், இதுநாள் வரை  டால்பின்களை மட்டுமே மனிதனை மாதிரி ஒலி எழுப்புவதற்கு பயிற்றுவிக்க முடியும் என்று நினைத்திருந்த ஆய்வாளர்களுக்கு, இந்த வெள்ளைத்திமிங்கிலம் எந்த பயிற்சியும் இல்லாமல், தானாகவே மனிதர்களைப் போல பேச முயற்சித்தது மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது.
அந்தப் பகுதி மீனவர்கள் மத்தியில் உலவும் நாடோடிக் கதைகளில் திமிங்கிலங்கள் மனிதனைப் போல பேசியதாக சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், அதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் எதுவும் இல்லை.
எனவே, இந்த குறிப்பிட்ட திமிங்கிலம் எப்படி இந்த ஒலிகளை எழுப்புகிறது என்பதை அறிய தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன்படி, இந்த என்.ஓ.சி. எழுப்பும்  ஒலிகளை பதிவு செய்த ஆய்வாளர்கள், இந்த ஒலிகள் மனிதர்களின் பேச்சு  ஒலிகளைப் போலவே கால அளவிலும் ஓசையின் ஒலியை அளக்கப் பயன்படுத்தப்படும் மாத்திரை அளவிலும் அமைந்திருப்பதை ஆதாரப் பூர்வமாக நிரூபித்தனர். அடுத்த கட்டமாக இந்த திமிங்கிலம் இந்த ஒலியை எப்படி எழுப்புகிறது என்பதை ஆராய்ந்தனர்.
சிரமப்பட்டாலும் பேச முயற்சிக்கும் பெலுகா அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. திமிங்கிலங்கள் வழக்கமாக ஒலி எழுப்புவதற்கு செய்யும் முயற்சிக்கு மாறாக, இந்த என்.ஓ.சி. திமிங்கிலம், மனிதர்களைப் போல ஒலி எழுப்ப நினைக்கும்போது தனது மூக்குப்பகுதியில் இருக்கும் வெற்றிடத்தில்  ஏற்படும் அழுத்தத்தை வேறு விதமாக மாற்றியமைத்தது.
நுரையீரலுக்குள் தண்ணீர் போகாமல்தடுப்பதற்காக, அதன் தலைக்கும் உடலுக்கும் இடையில் அமைந்திருக்கும் காற்றடைத்த பை போன்றதொரு உடலுறுப்பை, இந்த திமிங்கிலம் கஷ்டப்பட்டு ஊதிப் பெரிதாக்கி மனிதனைப் போல பேச முயற்சிப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். சுருக்கமாக சொல்வதானால், மனிதனைப்போல பேசுவது என்பது இந்த வெள்ளைத்திமிங்கிலத்துக்கு எளிதான விஷயமல்ல. ஆனால், அதற்கு அதில் ஆர்வம் இருக்கிறது. இந்த ஒலிகள் மூலம் அது மனிதர்களுடன் பேச விரும்புகிறது என்பதை அவர்கள் உறுதி செய்தனர். அதேசமயம், யாருடைய தூண்டுதலும் இல்லாமலே இந்த திமிங்கிலம் இந்தமுயற்சியில் ஏன், அல்லது எப்படி ஈடுபட்டது என்கிற கேள்விக்கு மட்டும் ஆய்வாளர்களால் விடை காண முடியவில்லை.
2. பக்கவாதத்தைத் தடுக்கும் தக்காளிதக்காளி அதிகம் சாப்பிட்டால் ஸ்டிரோக் என்று ஆங்கிலத்திலும், வாதம், பக்கவாதம் என்கிற பெயரில் தமிழிலும் அழைக்கப்படும் நோய் வராமல் தடுக்கமுடியும் என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தக்காளி, சிவப்பு குடமிளகாய், தர்பூசணி ஆகியவற்றில் இருக்கும் பிரகாசமான சிவப்பு நிறமுடைய  லைகோபீன் என்கிற வேதிப்பொருள் வாதநோயை தடுக்கும் தன்மை இருப்பதாக, இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
வாத நோய் குறித்து பின்லாந்தில் இருக்கும் மருத்துவ விஞ்ஞானிகள்  மேற்கொண்ட ஆய்வுக்காக ஆயிரத்து முப்பத்தியாறு ஆண்களை தேர்வு செய்து கொண்டனர். பரிசோதனையின் தொடக்கத்தில் அவர்களுடைய ரத்தத்தில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருளின் அளவு கணக்கிடப்பட்டது.
 ரத்தத்தில் லைகோபீன் அளவு எவ்வளவு இருக்கிறது என்கிற அடிப்படையில், இவர்களை நான்கு தனித்தனி குழுக்களாக பிரித்த ஆய்வாளர்கள், இந்த நான்கு குழுக்களையும் 12 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்தனர்.
இதில் ரத்தத்தில் லைகோபீனின் அளவு மிகக்குறைவாக இருந்த குழுவில் 258 பேர் இருந்தனர். இவர்களில் 25 பேருக்கு வாதநோய் தாக்கியது. அதேசமயம், லைகோபீனின் அளவு  ரத்தத்தில் அதிகம் இருந்த குழுவில் இருந்த 259 பேரில் 11 பேருக்கு மட்டுமே வாதநோய் தாக்கியது.
 இதன் அடிப்படையில், லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் வாதநோய் தாக்குவதை 55 சதவீதம் குறைக்கமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
தக்காளியில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருள், ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இது ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் ரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் தன்மை கொண்டது என்றும் கூறுகிறார் கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஜவ்னி கார்பி.
எனவே, இந்த லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி போன்ற காய்கறிகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் வாதநோயை தடுக்கலாம் என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக அவர் கூறுகிறார்.
3. புவி வெப்பமடைவதால் மீன்வளம் குறையும்


புவி வெப்பமடைந்து வருவதன் காரணமாக உலகக் கடல்களில் மீன்வளம் கிட்டத்தட்ட 24 சதவீதம் குறைந்துவிடும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள்  எச்சரித்துள்ளனர்.
 கடல் நீர் வெப்பமடைவதால் 2001ஆம் ஆண்டு தொடங்கி 2050ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அறுநூறுக்கும் அதிகமான மீன் இனங்கள் பாதிக்கப்படும் என்பதை கணினி மென்பொருள் துணைகொண்டு ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது அதிலுள்ள ஆக்சிஜனின் அளவு குறைந்துவிடுகிறது. இதன்காரணமாக மீன்களின் உடல் எடையும் கணிசமான அளவில் குறைந்து போய்விடுகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்கனவே கருதப்பட்டதைவிட மிகவும் அதிகம் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.
கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதால், ஒரு பகுதியில் வாழ்ந்த குறிப்பிட்ட வகை மீன்கள் தாங்கள் ஏற்கனவே வாழ்ந்த பகுதிகளில் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது, பல மீன் இனங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது என முந்தைய ஆய்வுகள் காட்டியிருந்தன.
நீரின் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய பல்வேறு விளைவுகளைக் அனுமானிக்கும் கணினி மென்பொருளை தற்போது ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
உலகில் வெப்பவாயு வெளியீட்டு விகிதம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட தரவுகளை உள்ளீடு செய்து, அதனால் மீன்வளத்துக்கு எந்த வகையான பாதிப்பு ஏற்படக்கூடும் என இவர்கள் கணித்துள்ளனர்.
கடல் நீரின் வெப்பம் சற்று அதிகரித்தாலே மீன்களுடைய உடல் எடையில் எதிர்பாராத அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏனென்றால், பாலூட்டி விலங்குகள் போல மீன்கள் சீரான உடல்வெப்பம் கொண்டவையல்ல மீன்கள். கடல் நீரோட்டத்தின் வெப்ப நிலைக்கு ஏற்ப மீன்களின் உடல் வெப்பமும் மாறுபடும்.
மீன்களின் உடல் வெப்பம் அதிகரிப்பதால் அவற்றுக்கு கூடுதலான ஆக்சிஜன் தேவைப்படும். அது கிடைக்காமல் போனால் அவற்றின் உடல் எடை வேகமாகக் குறைந்துவிடும் என்று இந்த மாற்றத்துக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
கடலில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வருடத்துக்கு 36 கிலோமீட்டர்கள் என்ற அளவில் துருவப் பகுதிகளை நோக்கி மீன்கள் தங்களது வாழ்விடங்களை மாற்றிக்கொண்டே போகும் என தற்போதைய ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஆய்வின் முடிவுகள்  நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கின்றன.
04. பவழஉயிரி தடுப்புக்கு ஆபத்து
ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்பரப்பில் இருக்கும் "பெரும் பவழஉயிரி தடுப்பு" ( கிரேட் பேரியர் ரீஃப் ) என்ற இயற்கை அமைப்பு, 1985இல் இருந்ததைவிட, பவழத்திட்டுகளில் பாதியை இழந்துவிட்டது என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பவழஉயிரி தடுப்பு இன்னும் பத்து ஆண்டுகளில், தன் வளத்தில் கால் பங்குக்கும் குறைவான அளவையே பெற்றிருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
உலகின் மிகப்பெரும் பவழஉயிரி தொடரான இந்த அமைப்புக்கு ஏற்பட்டு வரும் சேதத்தின் வேகம் 2006லிருந்து அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய கடற்கல்வி கழகம் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.  
மிகவும் கடுமையான புயல்காற்று, நட்சத்திர மீன்களின் தாக்குதல்கள் ஆகியவற்றாலேயே பெரும்பாலான சேதம் விளைந்திருப்பதாகக் கூறும் இந்த ஆய்வு, கடல் வெப்பநிலை அதிகரித்ததும் இந்த பவழஉயிரித் திட்டுகள் அரிக்கப்பட ஒரு காரணமாக இருந்திருப்பதாகக் கூறுகிறது. சுற்றுச்சூழல் மாசடைவதன் காரணமாக, கடல் அமிலத்தன்மை உயர்வதால், இவ்வாறு சேதமடைந்த பவழத்திட்டுகள்  புத்துயிர் பெறுவது தடுக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சரிபார்த்து தொகுத்து அளிப்பவர்: திருமதி. கிரித்திகா, ஆசிரியர் குழு - தமிழ் பகுதி, டீச்சர்ஸ் ஆப் இந்தியா போர்டல், அஸிம்பிரேம்ஜி பவுண்டேஷன், பங்களூரு.

பிரபஞ்சத்தின் முடிவு?

நமது பூமி மாபெரும் பிரபஞ்சத்தின் ஒரு மிகமிகச் சிறிய அங்கமே. சூரியன் உள்ளிட்ட கோடானுகோடி  நட்சத்திரங்களையும், கோடானுகோடி காலக்ஸிகளையும் (Galaxies) உள்ளடக்கியது இப்பிரபஞ்சம்.
நமது உலகம் எப்படி முடிவுக்கு வரும் என்பதை இதுநாள் வரையில் வேதாந்திகள் மற்றும் தத்துவஞானிகள் மட்டுமே பலவிதமாகக் கற்பிதம் செய்து கூறிவந்தார்கள். ஆயின் சமீபகாலமாக இயற்பியல் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் முடிவு பற்றிய பல அறிவியல்பூர்வமான தகவல்களை அளித்து வருகின்றனர்.
ஆனால் ஒரு வியத்தகு உண்மையாதெனில், இன்னமும் கோடிக்கணக்கான புதிய நட்சத்திரங்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. எனினும் ஒருநாள்-கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கும் பின்னர் – இருளைத்தவிர வேறு ஏதும் இருக்காது என்பது விஞ்ஞானிகள் கருத்து.
இது பற்றிய விவரங்கள்:
கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் காலக்ஸிகளையும், கருப்புத் துளைகளையும் இயக்கும் பிரபஞ்ச சக்தியில் குறிப்பிடும்படியான மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. புதியதோர் சக்தி அகிலத்தின் செயல்பாடுகளை இயக்குவதுபோல் தெரிகிறது. இது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் ஸ்டீன்ஹார்ட்டின் வலுவான கருத்து. வானியலாளர்களின் கண்டுபிடிப்புகள் நமது பிரபஞ்சத்தின் எதிர்காலம் பற்றி புதிய கருத்துகளைத் தோற்றுவிப்பதாக இவர் கூறுகிறார்.
 மனித இனம் தொடர்ந்து பின்வரும் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறது.
பிரபஞ்சத்திற்கு முடிவு என்பது உண்டா?
கோடிக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்ட காலக்ஸிகளின் கதி என்னவாக இருக்கும்?
இவற்றுக்கான விடைகளின் நிகழ்வைக் காண பிரபஞ்சத்தில் எவருமே இருக்கப் போவதில்லை என்று கூறுவது சரியா?  
ஹோமோ சேபியன்கள் எனும் நடைமுறை வரலாற்றுக் காலத்தில் வாழும் நம் மனித இனம் தோன்றிய காலம், பிரபஞ்சத்தின் ஒரு கண்ணிமைப்பு நேரம்தானா அல்லது அது குறிப்பிடும்படியானதா?
பிரபஞ்சத்தில் நம் நிலைதான் என்ன?
2011ம் ஆண்டின் இயற்பியலுக்கான  நோபல் பரிசு வழங்கப்பட்ட இது தொடர்பான கண்டுபிடிப்பு, உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. அந்தக் கண்டுபிடிப்பு நமது பிரபஞ்சத்தின் விரைவடைந்து வரும் விரிவடைதல் பற்றியது. நமது பிரபஞ்சம் ஏதோ ஒரு சக்தியால் அனைத்து திசைகளிலும் அதிவேகமாக விரிவடைந்து வருகிறது. இந்த சக்திபற்றி இதுவரை அறியப்படாததால், ஆராய்ச்சியாளர்கள்  இதனை கருமைச் சக்தி (Dark Energy) என அழைக்கின்றனர்.
1920ல் எட்வில் ஹப்பின் எனும் அமெரிக்க வானியலாளர் பிரபஞ்சம் விரிவடைவதைக் கண்டார். இதற்குக் காரணம் பெருவெடிப்பின் தாக்கம்தான் என விஞ்ஞானிகள் கருதி வந்தனர். பொருண்மையின் (Matter) ஈர்ப்பு சக்தி  பெருவெடிப்பின் சக்திக்கு எதிராகச் செயல்படுவதால், காலப்போக்கில், பிரபஞ்சத்தின் விரிவடைதல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் எனக் கருதப்பட்டது. அதுமட்டுமின்றி பிரபஞ்சத்தில் உள்ள பொருண்மையின் அளவு மிகமிக அதிகம் என்பதால், ‘‘விரிவடைதல் நின்று சுருங்குதல்’’ ஏற்படலாம் என நம்பினார்கள்.
ஆயின் தற்போதைய கண்டுபிடிப்புகளின்படி, பிரபஞ்சத்தின் விரிவடைதல், 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ ஒரு காரணத்தால் வளர்விரைவாக மாறியுள்ளது. இந்த வளர்விரைவான விரிவடைதல் காரணமாக, எதிர்காலப் பிரபஞ்சத்தின் நிலை பற்றி பல புதிய கருத்துகள் தோன்றியுள்ளன. இந்த மாற்றம் தோன்றக் காரணம் என்ன?
பிரபஞ்சவியலாளர்கள் (Cosmologists)இதனை கருமை சக்தியின் (Dark Energy) விளைவு என நம்புகின்றனர். இந்த ஈர்ப்பு சக்திக்கு எதிரான சக்தியின் பின்னணி என்ன, அது எப்படி ஏற்படுகிறது என்பது இன்றளவில் அவிழ்க்கப்படாத மிகப்பெரிய மர்மமாகவே உள்ளது. யுகங்களினூடே தோன்றி மறையும் சக்தியா இது? அல்லது பெருவெடிப்பிற்கு பின் சில நொடிகளில் தோன்றி, நிலையாக இருக்கும் வெற்றிடத்தின்  நிரந்தர ஒரு குணமா?
இதற்கான விடை தேடல், உலகெங்கிலும் பல விஞ்ஞானிகளின் முயற்சியை முடுக்கிவிட்டுள்ளது; தொழில்நுட்ப வளர்ச்சி இவர் தம் தேடலுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. பெருவெடிப்பு நிகழ்வின் ஒருவிதமான எதிரொலியாக, விண்வெளி முழுவதும், பலவீனமானதொரு ‘‘மின்காந்த ரீங்காரம்’’ (Electro magnetic buzz) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள், பிரபஞ்சத்தின் மொத்த சக்தியில் 70 சதவிகிதம் ‘‘கருமை சக்தி’’ எனக் கணக்கிட்டுள்ளனர்; இச்சக்தி பெரும் மாற்றங்களின்றி ஒரே மாதிரியாக இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
கருமை சக்தி (Dark Energy)
பெரும்பாலான வானியலாளர்கள், பிரபஞ்சத்தை விரிவடையச் செய்துகொண்டிருக்கும் கருமைசக்தியை, ‘‘பிரபஞ்சத்தின் நிலையான ஒன்றாக’’ (Cosmological Constant) ஏற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் அடிப்படையில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தின் வானியலாளர் ஃப்ரட் ஆடம்ஸ், இந்த நிலை தொடர்ந்தால் இந்தப் பிரபஞ்சத்தின் முடிவில்லா விரிவாக்கம் காரணமாக காலக்ஸிகள் அனைத்தும் விண்வெளியில் வெகுதொலைவிற்குத் தள்ளப்பட்டுவிடும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், அதன் விளைவாக பிரபஞ்சம் முற்றிலும் இருண்டதாக ஆகிவிடும் எனவும் கணிப்பு செய்துள்ளார். காலக்ஸிகளுக்கிடையே உள்ள வெளி அதிவிரைவில் தொடர்ந்து அதிகரிக்கையில் – இந்த அதிவிரைவு ஒளியின் வேகத்தைவிட அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் – அவற்றிடையே அனைத்துவிதமான தொடர்புகளும் அற்றுப்போகும். ஆடம்ஸின் கணிப்புப்படி இது சுமார் 100 பில்லியன் ஆண்டுகளில் நடைபெறக்கூடும். இந்த கால கட்டத்தில் பூமியே இல்லாது போய்விட்டிருக்கும் என்பதால்இதனைக் காண யாரும் இருக்கமுடியாது. சுமார் 3 பில்லியன் ஆண்டுகளில் நமது பூமி இன்றைக்கிருப்பதுபோல் சுமார் 40 சதவிகிதம் கூடுதல் வெப்பத்தைப் பெறும் என்கிறார்கள் வானியலாளர்கள். இதனால் பூமியில் இருக்கும் கடல்கள் அனைத்தும் ஆவியாகிவிடுமாதலால் பூமியில் அனைத்து உயிரினங்களும் இல்லாது  போய்விடும். அதற்குப் பின்னர் சில பில்லியன் ஆண்டுகளில் சூரியன் விரிவடைந்து, பூமியின் தற்போதைய சுற்றுப்பாதையைக் கடந்து, ஒரு சிறு பேப்பர் துண்டு நெருப்பில் விழுந்தால் எரிந்து உதிர்வதைப் போன்று அழிந்துவிடும்.
இவ்வாறு தொடர்ந்து நிகழ்கையில் காலக்ஸிகள், இருள் நேரத்தில் கடலில் செல்லும் ஒரு சிறு படகில் தெரியும் ஒரு மெழுகுவர்த்தியின் அலைபாயும் தீச்சுடர்கள் போன்று காட்சிதரும். இன்றைய நிலையில் அவை கடலில் செல்லும் ஒரு கப்பலின் பளீரிடும் வெளிச்சத்துடன் உள்ளன என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவும் .
பிரபஞ்சம் இத்தகைய நிலையை அடைவதற்கு சுமார் 1033 வருடங்கள் ஆகும் எனப்படுகிறது. மனிதர்களின் புரிதல்படி இது எல்லைகளே அற்ற அல்லது முடிவற்ற கால அளவு (eternity) ஆகும். இந்த கட்டத்தில் ஒரு நிகழ்வு ஏற்படத்துவங்கும். அதுதான் புரோட்டானின் பிளவு. புரோட்டான்கள்  ஒவ்வொரு அணுவின் கருவிலும் உள்ளது. புரோட்டானின் பிளவு காரணமாக நாம்  உலகில் காணும் அனைத்து பொருண்மைகளின் அடிப்படை அமைப்பும் - ஹைட்ரோஜன் முதல் யுரேனியம் வரை - சிதைவுறும்.
பிரபஞ்சத்தின் விண்வெளியில் உள்ள அனைத்தும் புரோட்டான் சிதைவின் அழிவு சக்தியால் அழிந்து போகையில், கருந்துளைகள் (Black Holes) மட்டும் இதனையும் தாங்கி நிற்கும். எனினும் ஒவ்வொரு கருந்துளையும் மிகமிக மெதுவாக ஆவியாகிவிடும். நமது சூரியன் 1066 வருடங்களில் இல்லாது போகும் என்றால் பால்வழி மண்டலத்தின் மத்தியில் உள்ள கருந்துளை 1086 வருடங்கள் பிழைத்திருக்கும்.
இந்த காலகட்டங்கள் எல்லாம் நம்மைப் பொறுத்தமட்டில் நிரந்தர, முடிவற்றவையாகவே (eternity) தெரியும். பிரபஞ்சத்தின் அனைத்து அமைப்புகளும் சுமார் 10100 ஆண்டுகளுக்குப் பின்னர் இல்லாமல் போன பின்பு, அது மிகப்பெரிய காலியிடமாக இருக்கும். அப்போதும் மீதமிருக்கும் ஒவ்வொரு துகளும் இன்றைக்கிருப்பது போன்று 10194 மடங்குகள் அதிகக் கொள்ளளவுடன் (Volume) இருக்கும். பிரபஞ்சத்தின் தட்பநிலை, மூல பூஜ்யம் எனப்படும் அப்ஸல்யூட் ஸீரோ (absolute Zero) விற்கு சற்றே மேலாக - 273.15 டிகிரி செல்சியஸாக இருக்கும். வெப்பத்தை ஏற்படுத்தக்கூடிய எதுவுமே அண்டவெளியில் இல்லாதிருக்கும்.
பெரும் பிளவு அல்லது கிழிதல் (The Big Rip)
வானியலாளர் ஆடம்ஸின் கருத்துக்கு முற்றிலும் மாறாகவும் நடக்க முடியும் என்று தெரிகிறது. அமெரிக்காவின் டார்ட்மவுத் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் ராபர்ட் கால்ட்வெல்லின் கருத்து மாறுபட்டதாக உள்ளது.
அவரது கூற்றின்படி, கருமை சக்தி (Dark Energy), முன்னவர் கூறியதுபோல் எப்போதும் ஒரேமாதிரி அளவுடன்  இருக்கவேண்டும் என்று கூறமுடியாது. சூப்பர்நோவாக்கள் நம்மிடமிருந்து எத்துணை வேகமாக அகன்று செல்கின்றன என்பது கருமைசக்தியைப் பாதிக்கவல்லது. இதன் காரணமாக நாம் சில விசித்திரமான விளைவுகளை எதிர்பார்க்கலாம்.
கருமைசக்தி அதிகரித்தால் என்னவாகும்?
 ‘‘பிரபஞ்ச விரிவடைதல்’’ பிரபஞ்சம் முழுவதையும் சிதைத்துக் கிழித்துவிடும் அளவிற்கு அதிகரிக்கும்.  கால்ட்வெல் இந்நிகழ்வு ஏற்பட (Big Rip) இன்னமும் 2 டிரில்லியன் ஆண்டுகளாகும் என்கிறார்கள். இது பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து இன்றுவரையிலான காலத்தைப்போல் பல மடங்குகள் அதிகமாகும்.
 இவ்வாறு நிகழ்ந்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிப் பார்ப்போம்.
- நாம் டெலஸ்கோப்புகள் மூலம் இன்று கண்டுகொண்டிருக்கும் காலக்ஸிகள், காணமுடியாத தொலைவிற்குச் சென்றுவிடும்.
- அசுரகதியில் விரிவடையும்விண்வெளியில் உருவாகும் சக்தியின் அபரிமிதமான அதிகரிப்பு காரணமாக, ஒரே காலக்ஸியில் ஈர்ப்புவிசையினால் ஒன்றோடொன்று பிணைப்புடன் இருக்கும் நட்சத்திரங்கள்கூட, ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்துபோகும் நிலை உருவாகும்.
- பால்வழி மண்டலம் (Milky Way) சிதறுண்டு போகும். இதனால் நமது பூமியும், ஒருவேளை பிழைத்திருந்தால், தனது சுற்றுப்பாதையை விட்டு விலகிவிலகிச் சென்றுவிடும். தொடரந்து இவ்வாறு விலகிச் செல்லும்போது அது கட்டுப்பாடின்றிச் சென்று, இறுதியில் வெடித்துச் சிதறிவிடும்.
- இறுதியாக கருமை சக்தியின் மிக அதிகரித்த வலிமை, அணுக்களைப் பிணைத்திருக்கும் சக்தியையும் முறியடிக்கும் நிலை ஏற்படும்.
- கால்ட்வெல்லின் கருத்துப்படி பிரபஞ்சம், அது துவங்கியபோது  ஏற்பட்ட பெருவெடிப்பு போன்று மற்றொரு பெருவெடிப்புடன் இல்லாது போகும்.
மேற்கூறியவை அறிவியல் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டவையாக, நமது சிந்தனா சக்தியையும் மீறியவையாக உள்ளன அல்லவா?
 ஃபிரட் ஆடம்ஸ் மற்றும் கால்ட்வெல்லின் கருத்துக்களில் பெருமளவு வேற்றுமைகள் இருப்பினும் ஒரு விஷயம் பொதுவாக உள்ளதைக் காணலாம். அது,
 ஒன்றுமே இல்லாததிலிருந்து திடீரென ஒன்று தோன்றுதல்,
விண்வெளி மற்றும் காலத்தின் திடீர் துவக்கம்
 இப்படிப்பட்ட ‘‘திடீர் துவக்கம் மற்றும் திடீர் முடிவு’’ எனும் கருத்தைப் பெரும்பாலான விஞ்ஞானிகள் முழுமனதுடன் ஏற்க மறுக்கின்றனர். மாறாக பிரபஞ்சத்தின் துவக்கம் மற்றும் முடிவு இயற்கையின் சுழற்சி முறையில் நடைபெறுகிறது என்னும் கருத்து வலுப்பெற்று வருகிறது.
எப்படியாயினும் ஒரு சுழற்சியே பல டிரில்லியன் ஆண்டுகளைக் கொண்டதாக இருக்கும் என்பதால் நடைமுறையில் விண்வெளியும் காலமும் ஆரம்பமும் முடிவும் அற்றவை எனக் கூறுவதில் தவறேதுமில்லை.
இந்தக் கட்டுரை தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் 2012 டிசம்பர் மாத துளிர் வெளியீட்டின் மறு பதிப்பு.
தேர்வு செய்து, தொகுத்தவர்: திருமதி.கிரித்திகா, ஆசிரியர் குழு, டீச்சர்ஸ் ஆப் இந்தியா மின் தளத் ,தமிழ் பகுதி, அஸிம்பிரேம்ஜி பவுண்டேஷன், பங்களூரு.

வாரன் பஃவட் எதிர்பார்க்கும் மூன்று குணங்கள்

வாரன் பஃவட் எதிர்பார்க்கும் மூன்று குணங்கள்

மாணவர்கள் அடிக்கடி வாரன் பஃவட் அவர்களைச் சென்று சந்திப்பார்கள். அப்படிச் சந்திக்க வரும் மாணவர்களிடம், அவர் விளையாட்டுப் போல் பல விஷயங்களைச் சொல்வார்.
அவர் ஒவ்வொரு மாணவனையும் ஒரு சக மாணவனைத் தேர்வு செய்யச் சொல்வார். ‘ஏதோ ஒரு மாணவனை அல்ல. நீங்கள் தேர்வு செய்யும் மாணவர்களின் 10% சம்பளம் உங்களது வாழ்நாள் பூராவும் கிடைக்கும் தகுதி உள்ள சக பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்யவேண்டும். அப்படி என்றால், எந்த மாணவனை நீங்கள் தேர்வு செய்வீர்கள்? ஏன்?’

மாணவர்கள் பதில் சொல்ல ஆரம்பிப்பதற்குள் அவர் மேலும் கேள்விகளைக் கேட்பார்: “அதிக மதி நுட்ப எண் உள்ள ஒரு நபரையா? அல்லது ஒரு கால் பந்தை வெகு தூரம் வீசும் திறமை வாய்ந்த ஒரு நபரையா? அல்லது அதிக மதிப்பெண்கள் வாங்கும் ஒரு நபரையா? - நீங்கள் யாரைத் தேர்வு செய்யப் போகிறீர்கள்? தேர்வு செய்ய அவரகளின் எந்த குணங்கள் காரணமாக இருந்தன?”
பிறகு வேறு விஷயங்களுக்கு சம்பாஷனையை மாற்றுவார்.
‘யார் பொதுவாக வெற்றி அடைய மாட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏன்?’ என்ற கேள்வியை எழுப்புவார்.
மாணவர்களின் பதிலுக்குக் காத்திராமல், அவர்களை காகிதங்களை எடுக்கச் சொல்வார். அதில் நேர்மறைக் குணங்களை இடது பக்கத்திலும், எதிர்மறைக் குணங்களை வலது பக்கத்திலும் பட்டியல் இடச் செய்வார்.
“உண்மையில், மிகவும் பயன்படும் குணங்களுக்கும் அறிவின் அளவு கோள்கள், அதிக மதிப்பெண்கள் அல்லது குடும்ப உறவுகள் ஆகியவைகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. மக்களின் தேர்வு ஒருவரின் பெருந்தன்மை, அன்பு, நேர்மை ஆகியவைகளின் அடிப்படையிலேயே அமையும்” என்று அவர் விளக்குவார்.
பிறகு மாணவர்களைப் பார்த்து அவர் கேட்பார்: “எந்த குணங்கள் அவர்களால் பெற முடியாது? எந்த குணங்கள் பெறாமல் அவர்களால் இருக்க முடியாது?”
இதற்கெல்லாம் பஃவட் சொன்ன பதில்களை மிச்சேல் ஐன்ஸ்னர் (Michael Eisner in his book - Working Together: Why Great Partnerships Succeed) தமது நூலில் விளக்கி உள்ளார்.
பஃவ்ட்டின் கருத்துக்கள் இதுதான்:
“இந்த குணங்கள் எல்லாம் மக்களால் தேர்வு செய்யப்பட்டவைகளாகும். மக்கள் தான் தாங்கள் தயாள குணமாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கிறார்கள். செய்யாத காரியங்களுக்கு உரிமை கொண்டாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதையும், வாழ்வின் முன்னேற்றப் புள்ளிகளை இன்னும் அதிகரிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதையும், பொறாமைப் பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதையும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
“இறுதியில், இவைகள் எல்லாம் மிகவும் எளிதான ஒன்று என்பதை அறிவீர்கள். இடது புறப் பட்டியல் குணங்களை மேம்படுத்துவதில் ஆரம்பித்து, வலது புறப் பட்டியல் குணங்களைச் செய்வதை நிறுத்துவது வரை முயல வேண்டும்.
“நீங்கள் பொதுவாக மூன்று குணங்களை ஒரு நபரிடம் காண விழைகிறீர்கள்.
அந்த மூன்று குணங்கள்: அறிவு, ஆற்றல், நேர்மை.
இவைகளில் கடைசியாக உள்ள நேர்மை ஒருவரிடம் இல்லாவிடில், மற்ற இரண்டு குணங்கள் இருந்தாலும், அதனால் எந்தவிதமான நன்மையும் இல்லை. ஒவ்வொருவரிடமும் அறிவும், ஆற்றலும் இருக்கின்றன. அப்படி இல்லாவிட்டால், நீங்கள் எல்லோரும் இங்கே வந்திருக்க முடியாது. ஆனால், நேர்மை என்பது நீங்கள் தீர்மானிக்க வேண்டியதாகும். அந்த குணத்துடன் நீங்கள் பிறக்க வில்லை. அந்தக் குணத்தைப் பள்ளியிலும் நீங்கள் கற்க முடியாது.”
பஃவட் ரொம்பவும் அதிர்ஷசாலி. அவர் அந்த மூன்று குணங்களையும் மேம்படுத்த மிகவும் பாடுபட்டவர். அந்த மூன்று குணங்களில், நேர்மையை அவர் தேர்வு செய்தார்.
மேலும் பஃவட் சொல்வார்:
“நம்பிக்கைத் துரோகம், கருமித்தனம், ஈகை இன்மை, அகம்பாவம் ஆகிய குணங்கள் அனைத்தும் மற்றவர்களிடம் இருப்பதை நீங்கள் விரும்பாவிடினும், இந்தக் குணங்களைக் கொண்டு இருக்க நீங்கள் முடிவு செய்கிறீர்கள். இவைகள் எல்லாம் நீங்கள் தேர்வு செய்தவைகளே. புகழ் என்ற பானை சிறியதாக குறைவானவற்றைக் கொண்டு உங்களைச் சுற்றி வருகிறது என்றும், மற்றவர்கள் அந்தப் பானையிலிருந்து எதையாவது ஒன்றை எடுத்து விட்டால், உங்களுக்கு கிடைப்பது குறைந்து விடுகிறது என்றும் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் நடப்பது அதற்கு நேர்மாறக இருக்கும்.”
(ஷானி பாரிஷ் (Shane Parrish) கட்டுரையைத் தழுவி எழுதியது.)
அனுப்பு: ஸ்ரீமதி.வத்சலா

கணக்கு, மொழி பாடங்களில் 3ம் வகுப்பு குழந்தைகளின் கற்கும் திறன் எப்படி?

சென்னை: நாடு முழுவதும் தொடக்க பள்ளிகளில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மொழி பாடம், கணக்கு பாடம் கற்கும் திறனை அறிய என்சிஇஆர்டி சர்வே நடத்த முடிவு செய்துள்ளது. இதையடுத்து, நேற்று முன் தினம் அந்த சர்வே தொடங்கியது.கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டிய அவசியத்தை அந்த சட்டம் வலியுறுத்துகிறது. அதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று கூறியதை அடுத்து நாடு முழுவதும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.இந்நிலையில், தொடக்கப் பள்ளிகளில் எவ்வளவு பேர் படிக்கின்றனர், பாதியில் படிப்பை விட்டவர்கள் எவ்வளவு பேர் என்ற விவரங்களை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் திரட்டி வருகிறது. இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் முடிவடையும்.இதற்கிடையே, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் தொடக்க கல்வியில் உள்ள குழந்தைகளுக்கான பாடத்திட்டத்தை உருவாக்கி அளித்துள்ளது. இந்த பாடத் திட்டத்தை பின்பற்றி பெரும்பாலான மாநிலங்கள் ஆரம்ப கல்வியை போதித்து வருகின்றன.

அதில் குழந்தைகளின் அடைவு திறன் கடந்த 3 ஆண்டுகளில் எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்ய என்சிஇஆர்டி திட்டமிட்டது.இதையடுத்து நாடு முழுவதும் 3ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு பற்றி அறிய சர்வே நடத்தப்படுகிறது. இந்த சர்வே நேற்று முன் தினம் தொடங்கியது. 3ம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளின் மொழிப்பாடம் (அந்தந்த மாநிலத்தில் உள்ளவை), கணக்கு பாடம் ஆகியவற்றில் கற்றல் திறன் குறித்து கணக்கெடுப்பு நடத்துகின்றனர். இதற்காக என்சிஇஆர்டி சார்பில் ராஷ்மி அருண்சர்மா தலைமையில் சர்வே குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறைக்கும் என்சிஇஆர்டி கடிதம் அனுப்பியுள்ளது.அதில், மேற்கண்ட சர்வே நடத்துவதற்கு பள்ளி களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இந்த சர்வே நடத்தி முடிக்கும் வரை 3ம் வகுப்பு குழந்தைகளை இடைவிடாமல் பள்ளிக்கு வரவழைத்து 100 சதவீத வருகைப்பதிவை காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர 3ம் வகுப்பு குழந்தைகளிடம் விடைகளுடன் கூடிய கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விகள் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகை யில் இருக்கும், அதிலிருந்து சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து  உத்தரபிரதேசம், இந்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இந்த சர்வே தொ டங்கி வைக்கப்பட்டது.தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் 23522, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் 5071, தனியார் பள்ளிகள் 6278 உள்ளன. இவற்றில் மொத்தம் 31 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களில் 3ம் வகுப்பு குழந்தைகளிடம் சர்வே நடக்க உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககம் இங்கு சர்வே நடத்த உள்ளது.இந்நிலையில், தமிழ்நாடு கல்வி நிலையின் ஆண்டறிக்கை (அசர் 2012) கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் 3&5ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் கழித்தல் கணக்கை போட முடிந்தோரின் சதவீதம் 2007ல் 59.4 சதவீதமாக இருந்தது, அது 2012ல் 40.7 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 3 முதல் 5ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் கழித்தல் கணக்கை போட முடிந்தோரின் சதவீதம் 2007ல் 43 சதவீதமாக இருந்தது, அது 2012ல் 38.6 சதவீதமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.