சனி, 25 அக்டோபர், 2014

அறிவியல் செய்திகள்

  1. மனிதனைப் போல பேசும் அதிசய திமிங்கிலம்











அமெரிக்காவைச் சேர்ந்த அதிசய  வெள்ளைத் திமிங்கிலம் ஒன்று மனிதனைப் போல பேச்சொலி  எழுப்புவது ஆய்வாளர்களை  ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த அதிசய திமிங்கிலத்தின் திறமையை  கண்டுபிடித்த கதையே சுவாரசியமானது.
 கலிபோர்னியாவில் இருக்கும் தேசிய கடல்வாழ் பாலூட்டிகள் ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஆழ்கடல் மூழ்கி  ஒருவர், ஒரு நாள் நீருக்குள் மூழ்கியிருந்தார். அவர் திடீரென  நீரிலிருந்து மேலே வந்தார். வந்த பிறகு உடனடியாக நீரிலிருந்து மேலே வரச்சொல்லி என்னை கூப்பிட்டது யார் என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார்.
ஆனால், கரையில் நின்றிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.ஏனென்றால், அவரை நீரிலிருந்து மேலே வரும்படி யாரும் அழைக்கவில்லை. ஆனால் நீரில் மூழ்கியிருந்தவரோ தனக்கு குரல் கேட்டதாக அடித்துச் சொன்னார். அவர்கள் இருந்த இடத்தில் அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. சில திமிங்கிலங்களைத் தவிர.
ஆய்வாளர்களுக்கு லேசாக சந்தேகம் ஏற்பட்டது. இந்த திமிங்கிலங்கள் ஏதாவது குரல் எழுப்பியிருக்குமோ என்று சந்தேகப்பட்டவர்கள், அந்த திமிங்கிலங்களை கண்காணிக்கத் தொடங்கினார்கள். சில தினங்களிலேயே அவர்களின் சந்தேகம் உறுதியானது.
பேசமுயலும் பெலுகா திமிங்கிலம்
என்.ஓ.சி. என்று பெயரிடப்பட்டிருந்த ஒன்பது வயது பெலூகா இன வெள்ளைத்திமிங்கிலம் தான் மனிதர்களை மாதிரி ஒலி எழுப்புகிறது என்று அவர்கள் கண்டுபிடித்தபோது ஆச்சரியம் பலமடங்கானது.காரணம், இதுநாள் வரை  டால்பின்களை மட்டுமே மனிதனை மாதிரி ஒலி எழுப்புவதற்கு பயிற்றுவிக்க முடியும் என்று நினைத்திருந்த ஆய்வாளர்களுக்கு, இந்த வெள்ளைத்திமிங்கிலம் எந்த பயிற்சியும் இல்லாமல், தானாகவே மனிதர்களைப் போல பேச முயற்சித்தது மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது.
அந்தப் பகுதி மீனவர்கள் மத்தியில் உலவும் நாடோடிக் கதைகளில் திமிங்கிலங்கள் மனிதனைப் போல பேசியதாக சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், அதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் எதுவும் இல்லை.
எனவே, இந்த குறிப்பிட்ட திமிங்கிலம் எப்படி இந்த ஒலிகளை எழுப்புகிறது என்பதை அறிய தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன்படி, இந்த என்.ஓ.சி. எழுப்பும்  ஒலிகளை பதிவு செய்த ஆய்வாளர்கள், இந்த ஒலிகள் மனிதர்களின் பேச்சு  ஒலிகளைப் போலவே கால அளவிலும் ஓசையின் ஒலியை அளக்கப் பயன்படுத்தப்படும் மாத்திரை அளவிலும் அமைந்திருப்பதை ஆதாரப் பூர்வமாக நிரூபித்தனர். அடுத்த கட்டமாக இந்த திமிங்கிலம் இந்த ஒலியை எப்படி எழுப்புகிறது என்பதை ஆராய்ந்தனர்.
சிரமப்பட்டாலும் பேச முயற்சிக்கும் பெலுகா அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. திமிங்கிலங்கள் வழக்கமாக ஒலி எழுப்புவதற்கு செய்யும் முயற்சிக்கு மாறாக, இந்த என்.ஓ.சி. திமிங்கிலம், மனிதர்களைப் போல ஒலி எழுப்ப நினைக்கும்போது தனது மூக்குப்பகுதியில் இருக்கும் வெற்றிடத்தில்  ஏற்படும் அழுத்தத்தை வேறு விதமாக மாற்றியமைத்தது.
நுரையீரலுக்குள் தண்ணீர் போகாமல்தடுப்பதற்காக, அதன் தலைக்கும் உடலுக்கும் இடையில் அமைந்திருக்கும் காற்றடைத்த பை போன்றதொரு உடலுறுப்பை, இந்த திமிங்கிலம் கஷ்டப்பட்டு ஊதிப் பெரிதாக்கி மனிதனைப் போல பேச முயற்சிப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். சுருக்கமாக சொல்வதானால், மனிதனைப்போல பேசுவது என்பது இந்த வெள்ளைத்திமிங்கிலத்துக்கு எளிதான விஷயமல்ல. ஆனால், அதற்கு அதில் ஆர்வம் இருக்கிறது. இந்த ஒலிகள் மூலம் அது மனிதர்களுடன் பேச விரும்புகிறது என்பதை அவர்கள் உறுதி செய்தனர். அதேசமயம், யாருடைய தூண்டுதலும் இல்லாமலே இந்த திமிங்கிலம் இந்தமுயற்சியில் ஏன், அல்லது எப்படி ஈடுபட்டது என்கிற கேள்விக்கு மட்டும் ஆய்வாளர்களால் விடை காண முடியவில்லை.
2. பக்கவாதத்தைத் தடுக்கும் தக்காளி







தக்காளி அதிகம் சாப்பிட்டால் ஸ்டிரோக் என்று ஆங்கிலத்திலும், வாதம், பக்கவாதம் என்கிற பெயரில் தமிழிலும் அழைக்கப்படும் நோய் வராமல் தடுக்கமுடியும் என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தக்காளி, சிவப்பு குடமிளகாய், தர்பூசணி ஆகியவற்றில் இருக்கும் பிரகாசமான சிவப்பு நிறமுடைய  லைகோபீன் என்கிற வேதிப்பொருள் வாதநோயை தடுக்கும் தன்மை இருப்பதாக, இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
வாத நோய் குறித்து பின்லாந்தில் இருக்கும் மருத்துவ விஞ்ஞானிகள்  மேற்கொண்ட ஆய்வுக்காக ஆயிரத்து முப்பத்தியாறு ஆண்களை தேர்வு செய்து கொண்டனர். பரிசோதனையின் தொடக்கத்தில் அவர்களுடைய ரத்தத்தில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருளின் அளவு கணக்கிடப்பட்டது.
 ரத்தத்தில் லைகோபீன் அளவு எவ்வளவு இருக்கிறது என்கிற அடிப்படையில், இவர்களை நான்கு தனித்தனி குழுக்களாக பிரித்த ஆய்வாளர்கள், இந்த நான்கு குழுக்களையும் 12 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்தனர்.
இதில் ரத்தத்தில் லைகோபீனின் அளவு மிகக்குறைவாக இருந்த குழுவில் 258 பேர் இருந்தனர். இவர்களில் 25 பேருக்கு வாதநோய் தாக்கியது. அதேசமயம், லைகோபீனின் அளவு  ரத்தத்தில் அதிகம் இருந்த குழுவில் இருந்த 259 பேரில் 11 பேருக்கு மட்டுமே வாதநோய் தாக்கியது.
 இதன் அடிப்படையில், லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் வாதநோய் தாக்குவதை 55 சதவீதம் குறைக்கமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
தக்காளியில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருள், ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இது ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் ரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் தன்மை கொண்டது என்றும் கூறுகிறார் கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஜவ்னி கார்பி.
எனவே, இந்த லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி போன்ற காய்கறிகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் வாதநோயை தடுக்கலாம் என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக அவர் கூறுகிறார்.
3. புவி வெப்பமடைவதால் மீன்வளம் குறையும்










புவி வெப்பமடைந்து வருவதன் காரணமாக உலகக் கடல்களில் மீன்வளம் கிட்டத்தட்ட 24 சதவீதம் குறைந்துவிடும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள்  எச்சரித்துள்ளனர்.
 கடல் நீர் வெப்பமடைவதால் 2001ஆம் ஆண்டு தொடங்கி 2050ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அறுநூறுக்கும் அதிகமான மீன் இனங்கள் பாதிக்கப்படும் என்பதை கணினி மென்பொருள் துணைகொண்டு ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது அதிலுள்ள ஆக்சிஜனின் அளவு குறைந்துவிடுகிறது. இதன்காரணமாக மீன்களின் உடல் எடையும் கணிசமான அளவில் குறைந்து போய்விடுகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்கனவே கருதப்பட்டதைவிட மிகவும் அதிகம் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.
கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதால், ஒரு பகுதியில் வாழ்ந்த குறிப்பிட்ட வகை மீன்கள் தாங்கள் ஏற்கனவே வாழ்ந்த பகுதிகளில் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது, பல மீன் இனங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது என முந்தைய ஆய்வுகள் காட்டியிருந்தன.
நீரின் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய பல்வேறு விளைவுகளைக் அனுமானிக்கும் கணினி மென்பொருளை தற்போது ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
உலகில் வெப்பவாயு வெளியீட்டு விகிதம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட தரவுகளை உள்ளீடு செய்து, அதனால் மீன்வளத்துக்கு எந்த வகையான பாதிப்பு ஏற்படக்கூடும் என இவர்கள் கணித்துள்ளனர்.
கடல் நீரின் வெப்பம் சற்று அதிகரித்தாலே மீன்களுடைய உடல் எடையில் எதிர்பாராத அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏனென்றால், பாலூட்டி விலங்குகள் போல மீன்கள் சீரான உடல்வெப்பம் கொண்டவையல்ல மீன்கள். கடல் நீரோட்டத்தின் வெப்ப நிலைக்கு ஏற்ப மீன்களின் உடல் வெப்பமும் மாறுபடும்.
மீன்களின் உடல் வெப்பம் அதிகரிப்பதால் அவற்றுக்கு கூடுதலான ஆக்சிஜன் தேவைப்படும். அது கிடைக்காமல் போனால் அவற்றின் உடல் எடை வேகமாகக் குறைந்துவிடும் என்று இந்த மாற்றத்துக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
கடலில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வருடத்துக்கு 36 கிலோமீட்டர்கள் என்ற அளவில் துருவப் பகுதிகளை நோக்கி மீன்கள் தங்களது வாழ்விடங்களை மாற்றிக்கொண்டே போகும் என தற்போதைய ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஆய்வின் முடிவுகள்  நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கின்றன.
04. பவழஉயிரி தடுப்புக்கு ஆபத்து








ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்பரப்பில் இருக்கும் "பெரும் பவழஉயிரி தடுப்பு" ( கிரேட் பேரியர் ரீஃப் ) என்ற இயற்கை அமைப்பு, 1985இல் இருந்ததைவிட, பவழத்திட்டுகளில் பாதியை இழந்துவிட்டது என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பவழஉயிரி தடுப்பு இன்னும் பத்து ஆண்டுகளில், தன் வளத்தில் கால் பங்குக்கும் குறைவான அளவையே பெற்றிருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
உலகின் மிகப்பெரும் பவழஉயிரி தொடரான இந்த அமைப்புக்கு ஏற்பட்டு வரும் சேதத்தின் வேகம் 2006லிருந்து அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய கடற்கல்வி கழகம் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.  
மிகவும் கடுமையான புயல்காற்று, நட்சத்திர மீன்களின் தாக்குதல்கள் ஆகியவற்றாலேயே பெரும்பாலான சேதம் விளைந்திருப்பதாகக் கூறும் இந்த ஆய்வு, கடல் வெப்பநிலை அதிகரித்ததும் இந்த பவழஉயிரித் திட்டுகள் அரிக்கப்பட ஒரு காரணமாக இருந்திருப்பதாகக் கூறுகிறது. சுற்றுச்சூழல் மாசடைவதன் காரணமாக, கடல் அமிலத்தன்மை உயர்வதால், இவ்வாறு சேதமடைந்த பவழத்திட்டுகள்  புத்துயிர் பெறுவது தடுக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சரிபார்த்து தொகுத்து அளிப்பவர்: திருமதி. கிரித்திகா, ஆசிரியர் குழு - தமிழ் பகுதி, டீச்சர்ஸ் ஆப் இந்தியா போர்டல், அஸிம்பிரேம்ஜி பவுண்டேஷன், பங்களூரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக