ஞாயிறு, 26 அக்டோபர், 2014

சுரேஷ் டெண்டுல்கள் வறுமைக் கோடு

வறுமை என்பது ஏழ்மையைக் குறிக்கும். வறுமையை ஒழிக்க மத்திய அரசாங்கத்திற்கு கொள்கையை வகுத்து வழிகாட்டும் பொறுப்பு இந்திய திட்டக் கமிஷனுக்கு உண்டு. பல ஏழைகளுக்கு உதவும் திட்டங்களை அரசு செயல்படுத்த ஏழ்மை நிலை தெரிய வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு இலவசமாகவும் அல்லது மான்யத்தின் அடிப்படையில் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வினியோகத்தும் ஏழை-எளிய மக்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் கடமையாகிறது.  கட்டாயக் கல்வி, உணவு உத்திரவாதம், இலவச மருத்துவ வசதி, கிராமப்புற கட்டாய வேலை வாய்ப்புத் திட்டம் ஆகியவைகளின் பயனாளிகளைக் கண்டறிய இந்த வறுமைக் கோடு பயன்படும்.
2009-ஆம் ஆண்டு சுரேஷ் டெண்டுல்கர் தலைமையில் வறுமைக் கோட்டை வரையறை செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அது வறுமைக் கோட்டை இப்படி விளக்கியது: நகரத்தில் வசிப்பவர்கள் நாள் ஒன்றுக்கு ரூபாய் 28.65 கீழே சம்பாதிப்பவர்களும், கிராமத்தில் வசிப்பவர்கள் நாள் ஒன்றுக்கு ரூபாய் 22.42 சம்பாதிப்பவர்களும் - வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள்(Below Powerty Line - BPL). இதைத் தான் டெண்டுல்கர் வறுமைக் கோடு என்று குறிபிடுகிறோம்.
இந்த வறுமைக் கோடு தவறான கோடு - இதன் மூலம் பல ஏழைகள் பலனடையாமல் போக வழி உண்டு. ஆகையால் இந்தக் கோட்டை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எதிர்ப்பு கிளம்பியதால், இந்தக் கோடு அனேகமாக அழிந்த கோடுதான். வேறு கோடு போடுவதற்கு சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு புதிய கமிட்டியை உருவாக்கி, வறுமைக் கோட்டிற்கு புதிய முறை அவசியமா என்பதை ஆராய உத்திரவிடப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் அறிக்கை வெளியிடப்பட இருக்கிறது. ஆனால், கிராமப்புற மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் அதற்குள் - ‘இனி வெளியிடப்படும் வறுமைக் கோடு டெண்டுல்கர் கோடாக இருக்காது’ என்றே சொல்லி விட்டார். ஆகையால் வறுமைக் கோட்டின் ஒரு நாள் வருமானம் டெண்டுல்கர் கணித்ததை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இருப்பினும், நமது நோக்கம் டெண்டுல்கள் வறுமைக் கோடு தவறாகக் கணிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை நிரூபிப்பது தான்.
முன்பு - அதாவது டெண்டுல்கருக்கு முன்பு - வறுமைக் கோடு என்பது கிராமப்புற நபர் ஒருவரின் வருமானம் ரூபாய் 12-க்கும் கீழேயும், நகரத்தில் நபர் ஒருவரின் வருமான ரூபாய் 17-க்கும் கீழேயும் இருந்தால் - அவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள். இந்த வறுமைக் கோட்டை ஒருவரின் உணவு உட்கொள்ளும் கலோரியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டதாகும். ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர, அவர்களின் உணவு உட்கொள்ளும் தரத்துடன், கல்வி, சுகாதாரம், விளக்கு, உடை மற்றும் காலணிகள் ஆகியவைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று டெண்டுல்கர் கமிட்டி தீர்மானித்து அதன் அடிப்படையில் வறுமைக் கோடு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த முறைப்படி கணிக்கப்பட்ட்தில், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் மக்கள் மொத்த ஜனத்தொகையில் 27.5% - லிருந்து 37.2% என்ற அளவு அதிகரித்துள்ளார்கள். இது வறுமைக் கோட்டின் ரூபாயின் மதிப்பைக் குறைத்த பிறகும் ஏற்பட்ட நிலை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது வறுமைக் கோட்டை ரூபாய் 33 ஆக கிராம நபருக்கும், ரூபாய் 45 ஆக நகர நபருக்கும் வரையறை செய்வதாக உதாரணமாக வைத்துக் கொள்வோம். இதன் விளைவு என்னவாகும்?
70% கிராமத்தினரும், 50% நகரத்தினரும் வறுமைக் கோட்டிற்குள் வந்துவிடுவர். ஆனால், வறுமை ஒழிப்பிற்கு ஒதுக்கீட்டுத் தொகை மட்டும் அதிகரிக்கப் போவதில்லை. இதனால், கீழ் மட்ட ஏழையிலும் ஏழையாக இருக்கும் பரம ஏழை - அநாதை நிலையில் இருக்கும் ஏழைகள் - பாதிக்கப்படுவார்கள்.
இதை  உதித் மிஸ்ராவின் வலைப் பூ துள்ளியமக விளக்கி உள்ளது. அதிலிருந்து முக்கியமான கருத்தைச் சுருக்கி எழுதுகிறேன் என் பாணியில்.
வறுமைக் கோடு என்பது ஏழை யார் என்பதை நிர்ணயம் செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அடையாளம். வறுமைக் கோட்டின் மூலம், ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை அளவிடக் கூடாது. மிகவும் அத்தியாவசியமானவைகளைப் பெறும் தகுதி உள்ளவர்கள் யார் என்பதை நிர்ணயிப்பதற்குத் தான் அது உதவ வேண்டும். இது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து ஒருவனின் வாழ்வை உயர்த்த உதவும் கோடு அல்ல. ஏழைக்கு அத்தியாவசியமானவைகளை அளித்து, அவனை வறுமைக் கோட்டிற்கு மேலே வளரும் படிச் செய்வது தான் அதன் நோக்கம். அதாவது ஒருவரும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்காத ஒரு நிலையை ஒரு நாடு அதி வேகமாக அடைய திட்டங்கள் தீட்ட வேண்டியது ஒரு சிறந்த அரசாங்கத்தின் கடமையாகும்.
இதை ஒரு உதாரணத்தால் விளக்குவோம். 5 பேர்கள் - A, B, C, D & E இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
நமது பொருளாதார மொத்த வரவு ரூபாய் 100 என்று வைத்துக் கொள்வோம்.
A - யின் வருமானம் ரூபாய் 35, B-யின் வருமானம் ரூபாய் 30,  C-யின் வருமானம் ரூபாய் 20, D-யின் வருமானம் ரூபாய் 10, E-யின் வருமானம் ரூபாய் 5 என்று மொத்த பொருளாதராம் ரூபாய் 100-ஆக இருக்கும்.
இந்த நிலையில், D & E - ஆகியவர்கள் தான் இந்தப் பொருளாதரத்தில் ஏழைகள் என்று சொல்லலாம். ஆகையால் வறுமைக்கோட்டை ரூபாய் 10-ல் கிழிக்கலாம். இதன் மூலம், நமது கவனம் எல்லாம் இந்த D & E - ஆகிய இரண்டு மிகவும் கீழான நிலையில் உள்ள மக்களை முன்னேற்றம் செய்வதில் முழுக் கவனம் செலுத்த முடியும்.
ஆனால், C-யையும் வறுமைக் கோட்டிற்குள் கொண்டு வர நினைத்தால் என்ன ஆகும்? இந்த நிலையிலும், C-என்பவரின் வருமானம் D-விட 2 பங்கும், E-யை விட 4 பங்கும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். C-யை வருமைக் கோட்டிற்குள் கொண்டு வந்ததால், மிகவும் பின் தங்கிய D & E -  ஆகியவர்களுக்குக் கிடைக்கும் மான்யம் அவர்களை விட நல்ல நிலையில் உள்ள C-யுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு, D & E -க்கு உதவிகளின் அளவு குறைந்து விடும். பகிர்ந்து கொடுக்கப்படும் பண்டங்கள் அதிக அளவில் இருந்தால், வறுமைக் கோட்டை ரூபாய் 100 என்று கூட வைத்துக் கொள்ளலாம்.
இன்னொன்றையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். C-யையும் - அவரது வருமானம் D & E-யை விட அதிகமாக இருப்பதால் - வறுமையை ஒழிக்கும் கோட்டில் சேர்க்கும் போது, அவரது நுகரும் நிலையையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் போது, உண்மையான D & E -ஆகியவர்களின் தேவைகள் புறக்கணைக்கப்பட வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக,  C-க்கு மான்ய உணவு வகைகள் தேவைப்படா. அதற்குப் பதில், பயிற்சிக் கல்விக்கு உதவி தேவையாக இருக்கும். அனால், E-யின் தேவை உணவாகத் தான் இருக்கும். அரசாங்கத்தின் இருக்கும் குறைந்த இருப்பை, அதிகமான ஏழைகள் - அடிமட்ட ஏழைகள் பயன்படும்படிச் செய்ய நினைத்தால் வறுமைக் கோட்டை உயர்த்தக் கூடாது. அதை விடுத்து, வறுமைக் கோட்டை உயர்த்தினால், அது பரம ஏழைகளுக்கு அநீதி இழப்பதாகத் தான் முடியும். இது பொருளாதார உண்மை. ஓட்டு வங்கிக்கு இது ஒத்து வராது. ஆகையால், அரசியல் வாதிகள் இதை ஆதரிக்க மாட்டார்கள்.
“வயிற்றிற்குச் சோறிடல் வேண்டும்
இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம்
பயிற்றுப் பலகல்வி தந்து இந்தப்
பாரை உயர்த்திடல் வேண்டும்”
-      என்ற மஹாகவி பாரதியின் கனவு நனவாகி, இந்த உப்புக்குச் சப்பில்லாத - வறுமைக்கோட்டையே ஒழித்து,
‘ஏழைஎன்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை இந்த நாட்டிலே’ - என்ற பாரதியின் வாக்கு பலிக்க நல்ல வழி பிறக்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக