சனி, 25 அக்டோபர், 2014

கணக்கு, மொழி பாடங்களில் 3ம் வகுப்பு குழந்தைகளின் கற்கும் திறன் எப்படி?

சென்னை: நாடு முழுவதும் தொடக்க பள்ளிகளில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மொழி பாடம், கணக்கு பாடம் கற்கும் திறனை அறிய என்சிஇஆர்டி சர்வே நடத்த முடிவு செய்துள்ளது. இதையடுத்து, நேற்று முன் தினம் அந்த சர்வே தொடங்கியது.கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டிய அவசியத்தை அந்த சட்டம் வலியுறுத்துகிறது. அதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று கூறியதை அடுத்து நாடு முழுவதும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.இந்நிலையில், தொடக்கப் பள்ளிகளில் எவ்வளவு பேர் படிக்கின்றனர், பாதியில் படிப்பை விட்டவர்கள் எவ்வளவு பேர் என்ற விவரங்களை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் திரட்டி வருகிறது. இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் முடிவடையும்.இதற்கிடையே, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் தொடக்க கல்வியில் உள்ள குழந்தைகளுக்கான பாடத்திட்டத்தை உருவாக்கி அளித்துள்ளது. இந்த பாடத் திட்டத்தை பின்பற்றி பெரும்பாலான மாநிலங்கள் ஆரம்ப கல்வியை போதித்து வருகின்றன.

அதில் குழந்தைகளின் அடைவு திறன் கடந்த 3 ஆண்டுகளில் எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்ய என்சிஇஆர்டி திட்டமிட்டது.இதையடுத்து நாடு முழுவதும் 3ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு பற்றி அறிய சர்வே நடத்தப்படுகிறது. இந்த சர்வே நேற்று முன் தினம் தொடங்கியது. 3ம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளின் மொழிப்பாடம் (அந்தந்த மாநிலத்தில் உள்ளவை), கணக்கு பாடம் ஆகியவற்றில் கற்றல் திறன் குறித்து கணக்கெடுப்பு நடத்துகின்றனர். இதற்காக என்சிஇஆர்டி சார்பில் ராஷ்மி அருண்சர்மா தலைமையில் சர்வே குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறைக்கும் என்சிஇஆர்டி கடிதம் அனுப்பியுள்ளது.அதில், மேற்கண்ட சர்வே நடத்துவதற்கு பள்ளி களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இந்த சர்வே நடத்தி முடிக்கும் வரை 3ம் வகுப்பு குழந்தைகளை இடைவிடாமல் பள்ளிக்கு வரவழைத்து 100 சதவீத வருகைப்பதிவை காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர 3ம் வகுப்பு குழந்தைகளிடம் விடைகளுடன் கூடிய கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விகள் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகை யில் இருக்கும், அதிலிருந்து சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து  உத்தரபிரதேசம், இந்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இந்த சர்வே தொ டங்கி வைக்கப்பட்டது.தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் 23522, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் 5071, தனியார் பள்ளிகள் 6278 உள்ளன. இவற்றில் மொத்தம் 31 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களில் 3ம் வகுப்பு குழந்தைகளிடம் சர்வே நடக்க உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககம் இங்கு சர்வே நடத்த உள்ளது.இந்நிலையில், தமிழ்நாடு கல்வி நிலையின் ஆண்டறிக்கை (அசர் 2012) கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் 3&5ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் கழித்தல் கணக்கை போட முடிந்தோரின் சதவீதம் 2007ல் 59.4 சதவீதமாக இருந்தது, அது 2012ல் 40.7 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 3 முதல் 5ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் கழித்தல் கணக்கை போட முடிந்தோரின் சதவீதம் 2007ல் 43 சதவீதமாக இருந்தது, அது 2012ல் 38.6 சதவீதமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக