ஒருவரை
நன்கு வேலை செய்யச் செய்வதற்கு - சன்மானம் கொடுத்து ஊக்குவிப்பது நமக்குத்
தெரிந்த ஒன்றுதான். ஆனால் சமீபத்திய ஆய்வு - நார்டிங்க்காம்
சர்வகலாசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு - “தவறான செய்கைக்குக் கொடுக்கும்
தண்டனை சரியாகச் செய்யும் செய்கைக்கு பணமாகக் கொடுக்கும் சன்மானம் போல்
செயல்படுகிறது” என்ற முடிவுக்கு வந்துள்ளது.
தலைக்கு மேல் கத்தி தொங்கி இருக்கும் நிலையில் ஒருவன் வேலை செய்தால்,
அவனது கவனம் சிதறி, வேலையை ஒழுங்காகச் செய்ய மாட்டான் என்று பொதுவாகச்
சொல்வார்கள். ஆனால், இந்த ஆய்வு அதற்கு நேர்மாறாக, தண்டனையின் பயச்
சூழ்நிலையில், ஒருவனது பார்க்கும் திறன் - கேட்கும் திறன் ஆதிகரிக்கிறது
என்று தடாலடியாகச் சொல்கிறது.
‘அவர்களின் ஆய்வு தான் என்ன?’ என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம்:
‘ஒருவன் ஜன்னல் உள்ள அறையில் உட்கார்த்தி வைக்கப்படுகிறான். வெளியே மழை
பெய்கிறது. மழை நீர் ஜன்னல் கண்ணாடியில் தெளித்து விழுவதால், வெளியில் உள்ள
உருவம் மங்கலாகத் தெரிகிறது. அந்த உருவம் மனிதனா அல்லது வேறு ஏதாவதா?
என்று அறையிலிருந்து பார்த்துக் கணித்துச் சொல்ல வேண்டும்.
தவறாக கணிக்கும் ஒவ்வொரு முறையும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
மோசமான தவறுகளுக்குத் தண்டனையின் அளவும் அதிகமாகும். இந்தச் செயல்களின்
போது அவர்களின் மூளை வேலை செய்யும் விதம் கண்காணிக்கப்படும்.
சிறப்பாக வேலை செய்பவர்களுக்கு பணத்தைச் சன்மானமாகக் கொடுத்தால் எப்படி
அவர்கள் செயல்படுவார்களோ அதே மாதிரி தண்டனையும் செயல்படுகிறது என்பதைக்
கண்டுபிடித்தார்கள்.
சரியான முடிவெடுப்பதில் தண்டனை மூளையைச் சரியானபடி செயல்பட வைக்கிறது என்கிறார்கள்.
‘ஆட்டிசம்’, ‘ஏ.டி.எச்.டி.’ - (Autism and ADHD - Attention Deficit
Hyperactivity Disorder) - ஆகியவைகளால் மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு
தண்டனைத் தத்துவம் பயன்படும் என்று உறுதி அளிக்கிறார் ஆய்வாளர் டாக்டர்
மாரியோஸ் பிலியாஸ்டிட்ஸ் - Marios Philiastides.
ஏர்வாடியில் பைத்தியங்களை ‘தண்டனை’ கொடுத்துக் குணப்படுத்துவதை இது சரி
என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. என்றாலும், ‘தண்டனை வலி’ என்பது
மனிதனின் திறனை ஊக்குவிக்கும் என்பது தற்போதைய நாகரீக உலகத்தின் இதயத்தையே
வலிக்கச் செய்யும்.
மேல் நாட்டு ஆய்வு அறிக்கைகள் பல நம் மூளையைக் குழப்பி, நம்மைச்
செயலிழக்கச் செய்து விடும் அபாயம் உள்ளது என்று நான் சொன்னால், அதை
ஏற்பவர்கள் ஒரு சிலராவது இருப்பார்களா என்பது சந்தேகமே.
‘இந்த ஆய்வு உனக்குப் புரியாவிடில், உனக்கு மூளையில் கோளாறு’ என்று
என்னைச் சொல்லி விடுவார்களோ என்ற பயத்துடனே இதை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக